18 August 2020

லஷ்மிநாராயணர் திருக்கோயில், ஹொசஹாலலு, மண்டியா மாவட்டம், கர்நாடகா.

இடைக்கால கர்நாடகத்தில் விஷ்ணுவர்த்தனன் தலமையின் கீழ் வலு பெற்ற ஹொய்சாள வம்சம் சேவுனர்களிடமிருந்து வட கர்நாடகத்தையும் சோழர்களிடமிருந்து தென் கர்நாடகப்பகுதிகளையும் மீட்டெடுத்து கர்நாடகம் முழுமையும் கைக்கொண்டு பேரரசாக உருவெடுத்தது.. கலை, இலக்கியம் சமுதாய வாழ்வியல் முறைகளில் மேம்பாட்டு நிலையைடைந்து ஹொய்சாளர் காலம் கர்நாடக வரலாற்றில் பொற்காலமாக விளங்கியது. அதுகாறும் சமண மதத்தை அரச மதமாக பின்பற்றிய ஹொய்சாள குலம் இராமானுஜர் தத்துவார்த்த கோட்பாட்டின்பால் கவரப்பட்டு பிட்டிதேவன் என்ற விஷ்ணுவர்த்தன் வைணவ மதத்தை தழுவியப்பின்னர் நாடெங்கிலும் நூற்றுக்கணக்கான சைவ,வைணவ, சமணக்கோயில்கள் எழுப்பப்பட்டன..

சற்றொப்ப முந்தைய ஹொய்சாள மன்னன் கார்மஹொய்சாளன் ( 1022 A.D) காலந்தொட்டு மாலிக்காபூர் படையெடுப்பால்(1310A.D) அல்லலுற்ற மூன்றாம் வல்லாளன் காலம் வரை ஹொய்சாள பேரரசின் முழுமையும் சுமார் 648 கோயில்கள் கட்டப்பட்டன என வரலாற்றாய்வாளர்கள் கணிக்கின்றனர்.
கங்கபாடி என்றழைக்கப்பட்ட மைசூர், மண்டியா, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான ஆலயங்களை எழுப்பினர். ஹொய்சாள கட்டிடக்கலை வல்லுனர்கள் மேலை சாளுக்கியரின் கூட்டல் வடிவ(cruciform)
அமைப்பினின்றும், சோழர்களின் நீள்சதுரங்க(rectangle) கோயில் கட்டிட அமைப்பினின்றும் முற்றிலும் மாறுபட்ட நட்சத்திர (stellar) வடிவ அமைப்புடைய கோயில்களை அறிமுகப்படுத்தினர்

தென் கர்நாடகப்பகுதிகளில் பெருமளவு கிடைக்கும் மாக்கல்லினை (chlorit schist soap stone ) கொண்டு கோயில்களை அமைத்தனர் இக்கல்லின் சிறப்பம்சம் யாதெனில் பாறையினின்று வெட்டியெடுத்து சிற்பங்களாக செதுக்கும் வரை இலகும் தன்மையுடையனவாகவும் (malleable and ductile) சூரிய ஒளி பட்டவுடன் இறுகி கடினமாகிவிடும் இந்த கருமை மற்றும் இளம்பச்சை நிறம் கொண்ட மாக்கல்லினால் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களையும் கடைந்தெடுத்த வழுவழுப்பான தூண்களையும் அமைத்து கண்கவர் கோயில்களை கட்டினர் சிற்பிகள் தத்தம் பெயர்களை தங்களது படைப்புகளில் பொறித்து வைத்தனர் இதன் மூலமாகவும் கல்வெட்டுகளினின்றும் அக்காலத்திய புகழ் பெற்ற சிற்பிகளையும் அவர்தம் பங்களிப்பினையும் அறிகிறோம் மல்லேஜா, மானியோஜா, மல்லிதம்மா, விபனா, மதுவண்ணா, கும்மபைரணா, தொண்டசாரி போன்றோர் பிரசித்தமானஹொய்சாள சிற்பிகள் என்பதையறிகிறோம் இத்தகு ஹொய்சாள கோயிலைப் பற்றி இங்கு காண்போம்

ஹொசஹாலலு -; மைசூருக்கருகே மண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜ பேட்டையில் மேற்காக 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இவ்வூர்.
ஹொய்சாளர் காலத்தில் புகழ்பெற்ற சதுர்வேதி மங்கலமாக சமண, சைவ வைணவ கோட்பாடுகளை போதிக்கும் மடங்கள் கொண்டு திகழ்ந்துள்ளது அக்காலத்தில் ராயசமுத்திரம் மற்றும் ஹொசஹொலவு என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. தற்போது சைவ வைணவ கோயில்கள் அழியும் தருவாயில் இருந்தபோதும் வைணவ கோயிலான லக்ஷ்மி நாராயணர் திருக்கோயில் நல்ல நிலையில் சிறப்பாக அமைந்து பக்தர்களையும் கலையார்வளர்களை கவரும் வண்ணம் உள்ளது.

லஷ்மி நாராயணர் திருக்கோயில்

இக்கோயிலானது ஹொய்சாள கோயில் கட்டிட மரபின்படி திரிகூடசால அமைப்பில் கட்டப்பட்டது ஜகதியானது ஒரு மீட்டர் உயரத்துடன் மேடை போன்று எழுப்பப்பட்டு அர்த மண்டபத்தை மையப்படுத்தி மூன்று கருவறைகள் கொண்ட கோயிலாகும் ஒன்றில்மட்டுமே கருவறையின் மீது சுகநாசியுடன்கூடிய விமானம் கட்டப்பட்டுள்ளதுமற்றவை வெறும் தளங்களாக விடப்பட்டுள்ளன கருவறைகள் மூன்றும் இடைநாழியுடன் நவரங்கம் எனப்படும் அர்தமண்டபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது

முதன்மை கருவறையில் நாராயணர் லலாதாம்பிகா கோலத்தில் சம்பங்கமாக நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். மேலிரு கரங்களில் சங்கு. சக்கரத்துடனும் கீழிரு கரங்கள் முறையே கதை மற்றும் பத்மத்தை பற்றியிருக்க நுண்ணிய வேலைப்பாடுகளமைந்த அணிகலன் மற்றும் நேரத்தியான ஆடையணிந்த நிலையில் நாகவடிவ தோரணத்தின் மேற்புறம் கீர்த்திமுகம் காட்டப்பட்டிருக்கிறது. தெற்குகருவறையிலுள்ள வேணுகோபாலசாமி சிலை தற்காலத்தில் அமைக்கப்பட்டதெனவும் பழைய சிற்பம் மைசூருக்கருகேயுள்ள கண்ணம்பாடி கிருஷ்ணர் கோயிலுக்கு எடுத்து சென்று அங்கு வழிபடுகின்றனர் என்பது இங்கு நிலவும் செவிவழி செய்தியாகும். தென்புறத்திலுள்ள கருவறையின் வாயிற்புற காவலர்கள் இரு புறமும் நின்றிருக்க மத்தியில் லஷமிநரசிம்மர் தமது மடியில் பூதேவி சகிதமாக அமர்ந்த நிலையில் அருள் பாலிக்கிறார். கீழ்புறம் பிரகலாதன் பெருமாளை சேவிக்கும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. அர்த மண்டபத்தை நான்கு தூண்கள் தாங்கி நிற்கின்றன அவை நன்கு கடையப்பட்டு வழுவழுப்பான நிலையில் நுண்ணிய வேலைப்பாடுகளை கொண்டு வடிக்கப்பட்டுள்ளன. மேலும் இத்தூண்கள் ஒன்பது பகுதிகளாக பிரிக்கப்பட்டு அவற்றில் வெவ்வேறு கோணங்களில் நடன மாந்தர்கள் பாங்குற காட்டப்பட்டுள்ளனர். அர்த்த மண்டபத்தின் விதானத்தில் வித விதமான அழகு புடைப்புச் சிற்பங்கள் சிற்பியின் கற்பனைக்கும் கலைத்திறனையும் நமக்கு சான்றாய் உணர்த்துகிறது. இம்மண்டபத்தில் மஹிஷாசுர மர்த்தினி மஹிஷனை வதம் செய்யும் கோலத்துடன்  காட்சி தருகிறார்

அதிட்டானம் எனப்படும் மேடை ஆறு பட்டிகைகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வவொரு பட்டிகைகளிலும் அன்னப்பறவைகள், யானைகள்,குதிரைகள் கொடிகள், இலைச்சுருள்கள் ஆடவர் பெண்டிர், பெண்கடவுளர்கள் மற்றும் இராமாயண மஹாபாரத கிருஷ்ணலீலா காட்சிகள் பாங்குற படைக்கப் பட்டுள்ளன. நடுப்பகுதியான கருவறையின் சுவர்களில் நூற்றிருபது சிற்பங்கள் எடுப்பான தோற்றமும் நுட்ப வேலைபாடுகளுடன் இசைக்கருவிகள் வடிக்கப்பட்டுள்ளன இச்சிற்பங்களில் சிவனின் திருக்கோலங்கள் முன்னிலைப்படுத்தி அமைத்திருப்பது சிறப்பு. நடனமாடும் சரஸ்வதி பார்வதி, பிரம்மா, வாசுதேவன் யோகமாதவா, காலிங்கநர்தனன் ஆடல்மகளிர் இசைக்கருவிகள் என பல்வேறு சிற்பங்கள் ஹொய்சாளர் காலத்திய கலை பண்பாட்டு சிறப்பினை நமக்கு காட்டுவனவாய் அமைந்துள்ளது.

இக்கோயிலில் கல்வெட்டுகள் காணப்படாமையால் இவற்றின் காலம் குறித்து அறுதியிட்டு கூறுதல் கடினம் ஆயினும் கோயில் கட்டுமானம், சிற்பங்களின் வடிவமைப்பைக் கண்ணுறுங்கால் நக்கேஹள்ளியிலுள்ள லஷ்மி நரசிம்மர் கோயில் சோமநாதபுரத்திலுள்ள கேசவர் கோயிலினையும் ஒத்துவருவதால் இக்கோயில் மல்லிதம்மா என்ற சிற்பியால் 1240 A.D ஆண்டு கட்டப்பட்டிருக்கலாம் என கன்னட வரலாற்றாய்வாளர்கள் ஒருவாறு கணிக்கின்றனர்..

கட்டுரை : ஜான் பீட்டர்
வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்