21 February 2021

வேழக்காடுகளில்சோழச்சுவடுகள், திருவகத்தீஸ்வரமுடையார்கோயில் Tநரசிபுரா, மைசூரு, கர்நாடகம்.

கட்டுரை ஆசிரியர்
ஜான் பீட்டர், தாளவாடி
 
மைசூரிலிருந்து சாமராஜநகர் செல்லும் வழியில் 20 கி.மீ தொலைவிலும் தலைகாடிலிருந்து மேற்காக 20 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது T. நரசிபுரா என்னும் ஊர். இங்கு காவிரி ஆறும் கபிலநதியும் கலந்து சங்கமிக்கும் கரையில் கங்கை கொண்ட சோழனால் கட்டப்பட்டது திருவகத்தீஸ்வரமுடையார் என்ற கற்றளி பின்னர் வந்த ஹொய்சாளர், மற்றும் விஜயநகர பேரரசு மன்னர்கள் மைசூர் உடையார் வம்ச அரசர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டது.

தல புராணத்தின் படி இக்கூடல் நதிக் கரையில் முன்னொரு காலத்தில் அகத்திய முனிவர் வெறும் மணலினால் லிங்கம் செய்து வழிபட்ட காரணத்தால் இம் மூலவர் அகத்தீஸ்வரமுடையார் எனவும் மணலீஸ்வரமுடையார் என்ற பெயரிலும் கன்னட கல்வெட்டுகளில் அங்க நாதீஸ்வர தேவா என்ற திரு நாமத்திலும் வழங்கப்பட்டதை அறிகிறோம். இக்கோயிலின் பலி பீடம் மற்றும் நந்தி மண்டப அதிட்டானத்தில் காணப்படும் 13 நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு ஹொய்சாள மன்னன் வீர நரசிம்மனின் கீழ் இப்பகுதியில் ஆளுகை புரிந்து வந்த ஜெய சாமந்த கங்க மண்டலபிள்ளை (எ) வீர நரசிம்மபிள்ளை தண்ட நாயக்கர் இவ்வகத்தீஸ்வரர் கோயிலின் பலி பீடத்தையும், நந்திதேவரை எழுப்பித்து நந்தி மண்டபத்தை அமைத்து கொடுத்ததையும் கூறுகிறது.

திருமுக்கூடல் நரசிபுரா பெயர் காரணம்-;
காவிரி ஆறும் கபிலநதியும் சங்கமிக்கும் இவ்விடத்தின் கீழ் அடியில் கண்ணுக்கு புலனாகாத மாய நதியான ஸ்பதிக சரோவரா என்ற நதியும் ஓடுகிறது என்ற ஐதீகத்தின் பொருட்டு இப்பகுதி திருமுக்கூடல் என்ற தமிழ் பெயரில் அக்காலந்தொட்டு அழைக்கப்பட்டு வந்ததை யறிகிறோம் தமிழகத்தின் சில பகுதிகளில் இங்ஙனம் ஆறுகள் சங்கமமாகும் இடங்கள் திருமுக்கூடல், கூடு துறை என்ற பெயரில் வழங்கிவருவது நாம் அறிந்ததே! காசிக்கு இணையாக கருதப்படும் இத்தலம் சமஸ்கிருத மொழியில் பஞ்சக்ரோஷா என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது இன்றளவும் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கும்ப மேளாவிழா இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பின்னர் விஜய நகர பேரரசின் கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் அகத்தீஸ்வரர் கோயில் எதிர் கரையில் விஷணுபெருமானுக்கு குஞ்சநரசிம்மர் கோயில் கட்டப் பட்டது இப்பெயரும் திருமுக்கூடல் என்ற பெயருடன் சேர்ந்து திருமுக்கூடலு நரசிபுரா என்றழைக்கப்பட்டது பின்னர் சுருக்கமாக T.நரசிபுரா மற்றும் T.N.புரா எனவும் தற்போது வழங்கி வருகிறது. பிற்கால மைசூர் உடையார் கால செப்பேடுகளில் திருமகுடா என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்து இப்பெயர் வந்ததாக பிழைபட குறித்திருப்பதை கொண்டு Wikipedia தகவலிலும் திருமுக்கூடல் என்ற தமிழ் பெயரை குறிக்காமல் திருமகுடலு என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்து இவ்வூர் வழங்கப்படுகிறது என பதிவேற்றிருப்பது வேதனைக்குரியது!