4 October 2020

கோம்மடீஸ்வரர், கோமட்டகிரி, கர்நாடகாவின் சமண தடயங்கள்..

கட்டுரை: ஜான்பீட்டர்
முன்னால் தொல்லியல் துறை.
தாளவாடி

மௌரிய மன்னன் சந்திரகுப்தன் (322B.C- 298B.C) அரசு முடியை துறந்து தனது குருவான பத்ரபாகுடன் பாடலிபுத்ரத்திலிருந்து வந்து சரவணபெலகுலாவில் சில காலமிருந்து பின்னர் சல்லேகன முறையில் உயிர்நீத்தார். அக்காலந் தொட்டு சமணம் தென்கர்நாடகத்தில் வேரூன்றியது எனலாம். பின்னர் கங்கர்கள் காலத்தில் பெரும் செல்வாக்கு பெற்றது அவருக்கு பின்னர் ஹொய்சாளர் காலத்தில் அரசர்கள், அரசியர் அமைச்சர்கள், தண்டநாயக்கரகள் என அனைவரும் சமணத்தை போற்றி வளர்த்தனர்

நாடெங்கும் சமண ஆலயங்கள் எழுப்பினர் பத்திற்க்கும் மேற்பட்ட பாகுபலியின் ஒற்றை கல்லிலான பிரமாண்ட சிலைகளை(monolithic statue) தென் கர்நாடகத்தில் நிறுவினர் மைசூர் மற்றும் அதனருகேயுள்ள பகுதிகளை கருத்திற் கொள்வோமானால், சரவணபெலகுலாவில் உள்ள உலகபிரசத்தி பெற்ற பாகுபலியின் 57 அடி உயர சிலையை சொல்லலாம் இதனை கங்க தேசத்தின் அமைச்சர் மற்றும் படைதலைவராக பணியாற்றிய சாமுண்டராயன் 981A.D. அமைத்தார் மற்றொரு பிரமாண்ட சிலை மண்டியா மாவட்டத்தில் அரத்திபுராவில் இரு மலைகளின் மத்தியில் குன்றின் மேல் அமைந்துள்ள பாகுபலி சிலை இது

முற்கால கங்கர் பாணியில் 10 அடி உயரமும் மூன்றரை அடி அகலமுடையது இச்சிலை சரவணபெலகுலா பாகுபலி சிலைக்கும் காலத்திற்கு முற்பட்டது எனவும் கி.பி.8ம் நூற்றாண்டு காலகட்டத்தில் அமைக்கப்பட்ட தாயிருக்கலாம் என கர்நாடக வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். மேலும் மைசூரிலிருந்து 22கி.மீ தொலைவில் பெடத்தூர் என்ற பசுமை சூழ்ந்த கிராமத்தில் பெலிகெரே என்ற ஏரியின் அருகே கோமட்டகிரி என்ற குன்றின் மேல் அமைந்துள்ள 17 அடி உயர பாகுபலிசிலையை காணலாம்.
 
பக்தர்கள் இவரை தரிசிக்க ஏதுவாக படிகட்டுகள் போடப்பட்டுள்ளன. எழிலார்ந்த சூழலில் ஏகாந்தமாய் நின்றிருக்கும் இவர் எண்ணூறு ஆண்டுகள் பழமையானவர் என்கின்றனர்.
 
பாகுபலி:- இப்பெயருக்கு வலிமயான கரங்களை உடையவர் எனப் பொருள். 24 சமணதீர்த்தங்கரரில் முதல் தீர்த்தங்கரர் ரிஷபநாதரின் இளைய புதல்வர். பனிரெண்டு காலம் நின்றநிலையில் கடுந்தவம் புரிந்து ஞானத்தையடைந்தார் ( கேவலக்யான )  இவர் கோம்மடீஸ்வரர் என்ற நாமத்திலும் வணங்கப்படுகிறார்.

சிலையமைப்பு-: நீண்ட காலமாய் அசைவற்று மோன நிலையில் நின்றிருக்கும் தவக்கோலம் கயோத்சர்க நிலை!, சுருள் சுருளான தலை கேசம் காதணியில்லா வெறுமையான நீண்ட செவி கருணை பொங்க இவ்வையகத்தை காணும் வகையில் திறந்த விழிகள் ஜீவகலை ததும்ப சாந்தமான முகவசீகரிப்பு அதில் மெல்லிய புன்னகை இழையோட, அகன்ற தோள்கள் வழியாக நீண்டு முழங்கால்கள் வரை செல்லும் கரங்கள் தொடை பகுதியை தொடாதவாறும் நெடுங்காலமாக புரிந்த கடுந்தவத்தினால் கொடிகள் காலிலிருந்து படர்ந்து சென்று தோள் வரை சுற்றிக் கொண்டிருக்கும் வண்ணம் பாங்குற வடிக்கப்பட்டிருக்கும் சிறப்பு என அத்தனையும் சரவணபெலகுலாவிலுள்ள பாகுபலியின் பிரமாண்ட சிலையை பிரதிபலிப்பதாக வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுங்கின்றனர் ஆனால் சிலையின் பக்கவாட்டில் இருபுறமும் யக்‌ஷன் யக்‌ஷி காட்டப்படருக்கிறது மாறாக இங்கு புற்றிலிருந்து நாகங்கள் படமெடுத்த நிலையில் காட்டப்பட்டிருப்பது மட்டும் வித்தியாசம் அவ்வளவே!

மாஸ்தாபிஷேகம்-; சரவணபெலகுலாவில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்நிகழ்வு பக்தர்கள் பொது ஜனங்களை கவரும் வண்ணமாக இங்கு ஆண்டு தோறும் கடந்த 70 ஆண்டுகளாக தொடர்ந்து நடை பெற்று வருகிறது இதனை ஷிமோகா மாவட்டம் ஸ்ரீஷேத்ர ஹம்புஜ ஜைன மடத்தை சேர்ந்தவர்கள் சிறப்பாக நடத்தி வருகின்றனர். நண்பகல் 12 மணிக்கு துவங்கும் இந்த அபிஷேக ஆராதனை மதியம் 2 மணிவரை நடைபெறுகிறது. குங்குமம், மஞ்சள், வாசனை திரவியங்கள் கலந்த வண்ணகலவை புனிதநீர் சந்தனம் அஷ்டகாந்தம் பால் இளநீர் கரும்புசாறு என அபிஷேகம் செய்யும் போது பக்தர்கள் " பாகுபலி மஹாராஜரிகெ ஜெயவாகலி!" அஹிம்ச பரம தரமனிகே ஜெயவாகலி என உற்சாக கோஷமிடுகின்றனர்... பின்னர் மங்களாராதனையுடன் மஸ்தாபிஷேக நிகழ்வு நிறைவுகிறது.. கோமட்டகிரியருகே ஒரு பாறையின் மேல் பாகுபலியின் பாதசுவடுகள் வடிக்கப்பட்டுள்ளது பக்தர்கள் தரிசிக்க ஏதுவாக படிகட்டுகளுடன் தளம் போன்று அமைத்துள்ளனர்  மேலும் அருகே 24 தீர்த்தங்கரர்களின் பாத சுவடுகளுக்கும் சிறு மாடங்கள் கட்டி அதனையும் வழிபடுகின்றனர்..