19 January 2020

வேழக்காடுகளில்சோழச்சுவடுகள் பதிவு 3. பெலத்தூரு, ஹெக்கததேவனகோட்டே, கர்நாடகா


கட்டுரை : ஜான் பீட்டர்
மைசூரிலிருந்து வடக்கே 43 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஹெக்கததேவனகோட்டே எனும் H.D.கோட்டே. நமது நாட்டின் புகழ்வாய்ந்த வனசரணாலயங்களில் ஒன்றான நாகரஹொலே, மற்றும் பந்திபூரானது இங்கிருந்து அருகாமையில் குடகு செல்லும் சாலையில் அமைந்துள்ளது இது யானைகள் மற்றும் புலிகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் வனமாகும்.

அக்கால கல்வெட்டுகளில் இவ்வூரானது நுகுநாடு, பயல்நாடு, நவிலுநாடு என பல பகுதிகளாக முறையே, கங்கர், நுளம்பர், மற்றும் கதம்பர்களின் ஆட்சியின் கீழும் பின்னர் சோழர்களின் மேலாண்மையை ஏற்று இங்குள்ள சிற்றரசர்கள் ஆட்சி செய்து வந்ததையும் அறிகிறோம். ஹொய்சாளர் ஆட்சியின் இறுதியில் மூன்றாம் வீர வல்லாள தேவனின் ஆட்சியின் போது இப்பகுதிகளை மஹாபிரதானியாக நிர்வகித்து வந்த ஹெக்கததேவன் அமைத்த கோட்டையின் பொருட்டு ஹெக்கததேவனகோட்டே என பிற்காலத்தில்வழங்கலாயிற்று.

சோழமன்னர்களில் இராஜேந்திரன் காலம் முதலாக இராஜாதிராஜன், வீரராஜேந்திரன், முதலாம் குலோத்துங்க சோழன் வரையிலான கல்வெட்டுகள் காணப்படுகின்றன இராஜராஜனின் கல்வெட்டுகள் காணகிடைத்தில. இவற்றுள் காலத்தில் முந்தையதாக கருதப்படுவது பெலத்தூரிலுள்ள இராஜேந்திர சோழனின் 9ம் ஆட்சியாண்டு கல்வெட்டாகும் சோழர் ஆட்சியின் இறுதியாக கிடைப்பது அன்னூரிலுள்ள( சத்யமங்கலம் அன்னூர் அல்ல) முதலாம் குலோத்துங்க சோழனின் 46 வது ஆட்சியாண்டு ( கி.பி.1115_1116) குறிப்பிடும் கல்வட்டாகும் அடுத்த ஆண்டே அதாவது 1117ல் விஷ்ணுவர்த்தனன் தலைகாட்டின் மீது படையெடுத்து சென்று அதிகனை கொன்று சோழராட்சிக்கு முடிவு கட்டுகிறார். சோழர்களின் காலத்தில் இங்கு பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் பெரும்பான்மையானவை கன்னட மொழி கல்வெட்டுகள்அவற்றுள் பூசல்களின் காரணமாக உயிர்நீத்த வீரர்களின் நடுகற்கள் உள்ளது. கர்நாடகத்தில்இராஜேந்திரனின் விருது பெயர்களை கொண்டுள்ள கல்வெட்டுகளில் பொதுவாக சோழ கங்க தேவர், பஞ்சவன் மாராயன் எனவும் பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட மற்றும் முடிகொண்ட கங்கை கொண்ட இராஜேந்திர சோழ தேவா என்ற அடியொற்றி வருவதை காண்கிறோம் ஆனால் அங்கநாதபுரா என்னுமிடத்தில் கிடைத்துள்ள இராஜேந்திரனின் கி.பி.1030 ஆண்டு கன்னட கல்வெட்டு இராஜேந்திரனை பலர்மெச்ச கண்டன்( பலர் புகழும் வீரன் ஆண்மகன்) தெலகரமாரி ( தெலுங்கு குல காலன்) எனவும் அழைப்பதை காண்கிறோம் அனேகமாக இந்த விருது பெயர்கள் அதுவும் கன்னடமொழியில் அமைந்திருப்பதென்பது பண்டித சோழனாகிய இராஜேந்திர சோழனுக்கு புகழ் கூட்டுவதே!
-: மைசூர்_ H.D.கோட்டே சாலையிலிருந்து முன்பாக 6 கி.மீ அமைந்துள்ளது பெலத்தூர் கிராமம். இங்கு செல்ல வேண்டும் என உத்வேகத்தை தூண்டியது இங்குள்ள வீர ராஜேந்திரன் காலத்திய பாடல் வரிகள் கொண்ட கலை நயம் மிக்க சதிகல்லாகும். .பி.கர். ஆவணத்தின் மூலம் இச்சதிகல் குறித்து அறிந்த பின்னர் அங்கு செல்ல விழைகையில் ஒரு சிக்கல் எழுந்தது உண்மையில் H.D.கோட்டே தாலுக்காவில் K.பெலத்தூர் S.பெலத்தூர் என இரண்டு ஊர்கள் இருந்தன இவற்றில் எது என்பதில் குழப்பமேற்பட திரு.Thomas Alexander அவர்களை தொடர்பு கொண்டு வினவினேன் அவரும் பெங்களூர் கன்னட சாஹித்ய அகாடமியில் விசாரித்து k.பெலத்தூர் தான் என உறுதி செய்தவுடன் எனது இரு சக்கர வண்டியில் தனியாக மைசூரிலிருந்து புறப்பட்டேன். வழியில் கிடைக்கும் நடுகற்கள், சதிகல் காண்பவற்றை புகைப்படம் எடுத்தவாறே சென்று கொண்டிருந்தேன். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் B.L.ரைஸ் என்ற ஆய்வாளரால் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் அச்சதிகல் குறித்த தகவல் பெரிதாக ஆய்வுபடுத்தபடவில்லை எங்கிருக்கிறதோ? அதைப்பற்றி விசாரித்தால் அவ்வூர் மக்களின் ரியாக்சன் என்னவாகயிருக்கும் என சிந்தித்தபடியே சென்று கொண்டிருந்தேன்! அப்போது அவ் வழியாக தென்பட்ட ஊரின் பெயர் பலகையை பார்த்ததும் ஆச்சர்யமடைந்தேன்! " கரிகாலா" என்பது தான் அது! வீர ராஜேந்திர சோழனின் விருது பெயர்களில் ஒன்றான கரிகாலன் கர்நாடகாவில் சென்னபட்னா கல்வெட்டு கொளத்தூர்செப்பேடு போன்றவற்றில் கண்டிருக்கிறோம் மேலும் H.D கோட்டே தாலுக்காவில் நல்லூர், மலையூர், அன்னூர், கள்ளம்பர் நகரம்( தற்போது கள்ளம்பலு) என தமிழ் பெயர்கள் பூண்டு காண்பது சோழர் சுவடுகளின் எச்சமே!

மேலும் 9ம் நூ. கங்கர் கல்வெட்டு ஸ்ரீபுருஷனின் புதல்வனான துக்கமாரா நினைவாக எழுப்பப்பட்ட சமண பசதியை கட்டியவர் நாராயண பெருந்தச்சன் எனவும் அதற்கு தானமாக வழங்கிய 6 கந்துகா நிலத்தை நெல்லுமண்ணு( நஞ்சை) என குறிப்பிடுவது அக்கால முதலே கன்னடமொழி கல்வெட்டுகளில் தமிழ் மொழியின் தாக்கத்தை காட்டுகிறது.


குந்தன் பெலத்தூர்-; கல்வெட்டுகளில்

"மும்முடி சோழ மண்டலத்து கங்கை கொண்ட சோழவளநாட்டு நுகுநாடான பெலத்தூர்" என குறிப்பிடப்படும் இவ்வூரை சுற்றிலும் கபினி ஆறு பாய்ந்து கழனியை வளப்படுத்துவதை கண்ணார கண்டேன்.. எங்கு நோக்கினும் நெற்வயல்கள் சோழர்கள் நஞ்சை கழனிகளின் நாயகர்கள் என்பதை பெலத்தூரில் கொட்டிக் கிடக்கும் நெற்கட்டு குவியல்கள் நமக்கு கட்டியம் கூறுகின்றன. கல்வெட்டுகளின் சான்றின் மூலம் அக்காலத்தில் இவ்வூர் கோயில்கள் நிறைந்து காணப்பட்டதையறிகிறோம். பாணேஸ்வரா் கோயில் மல்லிகார்ஜுனசாமிகோயில் மல்லேஸ்வரா கோயில் நரசிம்மர் கோயில் பெண் தெய்வங்களுக்காக காளம்மாள் கோயில் பினகளமன ஆலயம் இவற்றில் தற்போது எஞ்சியவை யாதுமில்லை! தற்போது புதிதாக கட்டப்பட்ட சப்தமாதர் கோயில், 18ம் நூ. மைசூர் அரசரால் எழுப்பப்பட்ட லஷ்மி நரசிம்மா் கோயில் மற்றும் அழிந்து போன பாணேஸவரா கோயிலின் மூலவரைக் கொண்டு தற்காலத்தில் சிறியதாக கோயிலைக் கட்டியுள்ளனர். அவ்வளவே! இக்கிராமத்தின் பழஞ்சிறப்பை நமக்கு இன்றளவும் உணர்த்துவது ஊரெங்கிலும் காணப்படும் சிற்பங்கள் நடுகற்கள், சதிகற்களாகும்.

சோழர்கால கல்வெட்டுகள்-; பாணேஸ்வரர் கோயிலின் முன்பாக காணப்பட்டதாக ஆவணத்தில் குறிப்பிடப்படும் இரண்டு கல்வெட்டுகள் இராஜேந்திர சோழனின் காலத்தியது.. அன்னாரது 9ம் ஆட்சியாண்டில் (கி.பி.1020) பெலத்தூரில் பழுதடைந்த சிவன் கோயிலை சீர் படுத்தியும் அவ்வமயம் வேத நெறிகளின்படி ருத்ர ஹோமம் நடத்தி அக்கோயில் முன்பாக கூடியிருந்த ஆயிரம் மக்களுக்கு அன்னதானமளித்து தர்மத்தை நிறைவேற்றியது பசவய்யாவின் மகனான முருகசெட்டி எனவும் பெலத்தூர்ஜெயம் கொண்ட சோழ பெர்மாடி காவுண்ட மகன் ஜவனிகாவுண்டா மற்றும் நல்லமுருகசெட்டி மகனான பசவசெட்டி, மகப்பே சேர்ந்து 15 குழி நஞ்சை நிலத்தையும் 5 குழி நிலத்தை பூந்தோட்டம் அமைக்கவும், நுந்தா விளக்கெரிக்க தானமாக அளித்ததை கூறுகிறது. மற்றொரு கல்வெட்டு இராஜேந்திர சோழனின் 22 ம் ஆட்சியாண்டு கல்வெட்டு வீர வலஞ்சியரின் மெய்கீர்த்தி பொறிக்கப்பட்டது 500 வீரசாசனங்களைக் கொண்டு அகிலமெங்கும் புகழ் பரப்புவரென்றும், நற்குணங்களிலும் நீதி நேர்மை தவறாமல் நடப்பவரென்றும் வீர வலஞ்சிய தர்மத்தை பேணிக் காப்பவரனவும் தைரிய மிக்க கந்தளிவாசு தேவா மூலபத்ரா வழி தோன்றல்களெனவும் ஆற்றலில் சிவன் விஷ்ணுவிற்க்கும் அறிவில் பிரம்மனுக்கு நிகராக திகழ்பவர்கள் எனவும் விவரிக்கிறது கங்கபாடியில் சோழர் ஆட்சி காலத்தில் வணிகர்கள் பெரும் செல்வாக்கு பெற்று வெண்குடை, வீரக்கொடி தமக்கென கொண்டு சமுதாயத்தில் சிறப்புடன் திகழ்ந்ததை நமக்கு உணர்த்துகிறது.

மற்றொன்று வீர ராஜேந்திர சோழனின்6 வது ஆட்சியாண்டில் எழுப்பப்பட்ட சதிகல் புற நானூற்று பாடலுக்கு வடிவம் கொடுத்தாற் போன்று ஒத்த நிகழ்வினை பாடல் வடிவிலும் சிற்பவமைவிலும் கொண்டு நடுகற்கள் ஆய்வாளர்களால் The Queen of sati stone என புகழப்படும் ராணி தெகப்பையின் சதிகல் பற்றிய தகவல் அடுத்த பதிவில்....



















தொடரும்....