1 November 2020

சிந்துவல்லி.... வேழக் காடுகளில் சோழச் சுவடுகள்

கட்டுரை:
ஜான் பீட்டர்
முன்னாள் தொல்லியல் துறை
 
கவேர கன்ய சகியனான ராஜராஜன் தலைகாவேரியாம்

குடகு நாட்டையும் அது பாயந்தோடி கழனியெல்லாம் வளமான கங்கநாட்டையும் கைக் கொண்டதில் வியப்பேதுமில்லை! C.H.நகர் கெம்பணபுராவில் கிடைத்த இராஜராஜனின் கி.பி. 991 ஆண்டு கன்னட கல்வெட்டு முதல் H.D.கோட்டே அன்னூரிலுள்ள முதலாம் குலோத்துங்க சோழனின் 46 வது ஆட்சியாண்டு கி.பி1116 தமிழ் கன்னட கல்வெட்டு வரை(120 ஆண்டுகள் மேலாக) சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் இங்கே (மைசூர்,மண்டியா,C.H.நகர்)தொடர்ச்சியாக கிடைக்கின்றன.( 1117 ஆம் ஆண்டு தலக்காடு போரில் விஷ்ணு வர்த்தன் இங்கு சோழர்கள் ஆட்சிக்கு முடிவு கட்டுகிறான்).

கஜஆரண்யஸ்தல( வேழ காடுகள்) என கங்கர்களின் செப்பேடுகளில் குறிக்கபெறும் இக் கங்கபாடியை சோழர்கள் கைப்பற்றி தலைக்காட்டை இராஜராஜபுரம் என்று பெயர்மாற்றம் செய்து சோழ நிர்வாக முறையை புகுத்தி ஆட்சி செய்யத் தொடங்கினர் அதுகாறும் கங்கர்களின் அரசு மதமான சமணம் செழித்திருந்த நிலையில் இங்கு சைவ நெறிமுறை கமழதொடங்கின.. சோழ அரசர்கள் தங்களது விருது பெயர்களாலே பிரம்மதேயங்களை உருவாக்கினர்.கற்றளிகளை கட்டினர் அதற்கு நிவந்தங்கள் வழங்கவும் வழி செய்தனர் முன்பு (கதம்பர், கங்கர் ஆட்சியில்) இல்லாத வகையில் ஆகமத்திலும் அர்ச்சனா விதியிலும் தேர்ச்சி பெற்ற சிவப்பிராமணர்களை தமிழகத்திலிருந்து இங்கு குடிபெயர செய்து அக்கோயில்களில் தமிழ் ஆகம முறைப்படி பூசனை வழிபாடு நடைபெறலாயிற்று. இவை வெறும் சமய வழிபாட்டு தளங்களாக மட்டும் திகழாமல் பல தரபட்ட மக்களை ஒன்றிணைக்கும் சமுதாய கூடங்களாகவும் செயலாற்றின.. கல்வி போதித்தல், ஊர்கூடி விவாதித்தல்அறப்பணி,திருவிழா போன்ற முக்கிய முடிவுகளை எடுத்தல் நில விற்பனை தொடர்பான ஆணைகளை நிறைவேற்றுதல் போன்ற செயல்பாடுகளும் இங்கு நடந்தேறின.

தமிழகத்தில் நாம் காணும் சோழக் கோயில்கள் போலல்லாமல் இவை அளவில் சிறியவை. கருவறையும் அர்தமண்டமும் மட்டுமே கொண்டவைசோழர்களின் ஆட்சிக்கு பின்னர் வந்த ஹொய்சாளர் விஜய நகர பேரரசினர்,

மைசூர் உடையார் வம்சத்தவரால் பெரும்பாலான கோயில்கள் ( கோலாரம்மன் கோயில், அப்ரமேயன் விண்ணகரம் தவிர) புனரமைப்பு மற்றும் விரிவாக்கம் செய்யப்படாமல் தற்சமயம் வழிபாடின்றி ஏறக்குறைய அழிவின் விளிம்பில் சிக்கி கிடைக்கின்றன ஆவணங்கள் குறிப்பிடும் சில கோயில்களின் தடயங்களை கூட தற்சமயம் காண இயலவில்லை.. இதற்கான காரணம் என்னவென ஆராந்தோமெனில் எந்தவொரு நாடு அல்லது மாநிலமாகட்டும் தம் மண் சார்ந்த மன்னர்களையும் மரபு சார்ந்த கலைச்சின்னங்களையுமே அறிந்து கொள்ளவும் அவற்றை பேணுவதில் காட்டும் ஆர்வத்தை அந்நிய ஆட்சியாளரையும் அவர்கள் விட்டு சென்ற வரலாற்று சின்னங்களை அறிந்து கொள்ள முற்படுவதிலும் அவற்றை பாதுகாக்க ஏற்படும் சுணக்கமும் இயல்பே!

அவ்வகையில் கர்நாடக சோழர் ஆட்சி கட்டிய கோயில்கள் பற்றிய ஆய்வு என எடுத்து கொண்டால் 1986ல் வெளிவந்த "தி இம்பீரியல் சோழா இன் கர்நாடகா என்ற முனைவர் ஆய்வேடும் "தி சோழா ஆர்ட் இன் கர்நாடகா என்ற சிறு கட்டுரை தொகுதி தவிர்த்து முழுமையான ஆய்வு நூல்கள் வெளிவரவில்லை ! நூற்றாண்டு முன்னர் B.l.ரைஸ், நரசிம்மாச்சாரியர் ஆவணங்களில் பதிப்பித்த கல்வெட்டுகள், கோயில்களின் தற்போதைய நிலை என்ன? என யோசித்தோமானால் வெறுமையே மிஞ்சுகிறது. இறையினருளால் நண்பர்களின் உதவியுடன் சில கோயில்களுக்கு சென்று ( தடிமாலிங்கி,கலியூர், சிதி பெட்டா,அவணி கெலசூர்,பன்னூர்,மாறள்ளி, மத்தூர் கே பெலத்தூர்) அக்கோயில்களை பற்றி எழுதும் பேறு வாய்க்க பெற்றேன்! அவ் வகையில் இம்முறை சிந்துவல்லி என்ற ஊரை தேர்ந்தெடுத்து அங்கு செல்ல ஆயத்தமானேன்!

சிந்துவல்லி மைசூரலிருந்து 25 கி.மீ தொலைவில் நஞ்சன்கூடு செல்லும் சாலையின் மத்தியில் அமைந்துள்ள கிராமம் அழகான இந்த சிந்துவல்லி என்ற பெயரின்பால் கொண்ட விருப்பம் யாதெனின் சோழ மாதேவியர் ஏழிசைவல்லபி,அமரவல்லி, மற்றும் தஞ்சை பெருவுடையார் கோயில் கல் வெட்டுகள் குறிப்பிடும் தளிச்சேரி பெண்டுகளான  யனவல்லி,சித்திரவல்லி, மதனவல்லி என்ற பெயர்களோடு கூடி ஒத்து வருவதால் ஏற்பட்ட ஈர்ப்பாகயிருக்கலாம்

( பெங்களூரில் ஆலூர்கருகே ஒரு சிந்துவல்லி என்ற ஊரும் அங்கு சோழ கல்வெட்டுகள் கிடைப்பதும் நோக்கற்பாலது) மைசூரிலிருந்து எனது இரு சக்கர மோட்டார் வண்டியில் கிளம்பி 15 கி்மீ. தொலைவில் கடக்கோலா என்னும் ஊரை வந்தடைந்தேன் அங்கிருந்து வலப்புறமாக பிரிந்து சென்ற பாதையில் சில மைல்கல் தூரம் பயணித்தவுடன் டி.வி.எஸ் நிறுவனத்தினரின் மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பிரமாண்டமான தொழிற்சாலையைக் கண்டேன்! அது மாலை நேரமாதலால் முதல் பகுதி வேலையை முடித்து தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கில் நிறுவனத்தின் பேருந்துகளிலும் தத்தம் வாகனங்களிலும் புறப்பட்டு சென்று கொண்டிருந்தர் மாதக்கணக்காக கொரன்டைன் சிறை வாசத்தால் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்ததால் அத்தனை ஜனத்திரளை ஒருங்கே கண்டதில் வியப்பு மேலிட்டது உண்மையே!

பின்னர் அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள சிந்துவல்லியை நோக்கி புறப்பட்டேன். ஊரை நெருங்கும்போது மனம் சிறிது படபடத்தது புதிய இடம் முன்பின் அறிமுகமில்லாத நபர் அங்கு வந்து பழைய கோயிலை விசாரித்தால் அவ்வூர் மக்களின் மனவோட்டம் என்னவாயிருக்கும்? என்று மனதிற்குள் யோசித்தபடியே சிந்துவல்லியை வந்தடைந்தேன். ஊரின்நுழைவாயிலிலே தென்பட்ட கோபுரங்களைக் கண்டு அங்கு சென்று பார்த்த போது அவை பசவண்ணா தேவஸ்தானம் மற்றும் கனகதாசர்,கேளம்மா குடிகள் என்ற பெயரில் வணங்கப்படும் சமீப காலத்தில் கட்டப்பட்ட கோயில்களாகும். எனவே அங்கு நின்றிருந்த ஊர்காரர்களிடம் ஹள்ளி பாஷையில் (கிராமத்துகன்னடம்) மாத்தாட தொடங்கினேன் " இவரே இல்லி தும்ப ஹிந்தின கால ஷிவனது தேவஸ்தான எல்லிதே? என்று வினவியுடன் அருகிலிருந்தவர் "கோட்டே தேவஸ்தானதகேளுதாரப்பா" என அவருக்கு பதிலுரைத்து எனக்குகோயிலுக்கு செல்லும் வழியை கூற ஆரம்பித்தார்...

அவ்வழியே கிராமத்தின் குறுகலான வீதியினுள் செல்ல தொடங்கினேன் அது சிறிய கிராமம் எண்ணூறுக்கும் குறைவான வீடுகள் தமிழகத்தின் கிராமங்களை போல நகர நவீன கூறுகளை அதிகம் உள்வாங்காமல் கிராமிய மணத்தையும் அடையாளத்தையும் தம்முள் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்றே கூறலாம். மச்சு வீடுகள் அவற்றில் அடர்சிவப்பு, பச்சை வண்ணம் தீட்டி மரத்தூண்கள் தாங்கிய இரு புறத்திலும் திண்ணைகள் வெளிப்புற முற்றத்தில் பசுக்கள் எருதுகள் கட்டப்பட்டிருக்க கோழிகள் அங்கு குவியலாய் கொட்டியிருக்கும் "கொப்பர"( மாட்டுசாணம் சாம்பல், வைக்கோல் கலந்து மக்கி உருவாகும் இயற்கை எரு) யை கால்களால் கிளறி குஷியாய் இரையை உண்டு கொண்டிருந்தது இவற்றையெல்லாம் கவனித்தபடி ஊருக்கு வெளியே ஒற்றையடி பாதையில் செல்லும் போதே சட்டென்று சூழ்நிலை மாறியது இருமருங்கும் பச்சை பசலென்று புல்வெளிகள் நாற்று நெல்லின் நறுமணம் நாசிக்கு கம்மென்று வந்தது..

நூற்றாண்டு கால ஆலமரங்களின் விழுதுகள் மாலைக்காற்றில் அசைந்தாடின. பெரிய வாய்காலிலிருந்து நீர் வழிந்தோடி செம்மண் பாதையை நனைத்தது அங்கே நாம் தேடி வந்த சோழர் கால கோயில் சற்று மேட்டுபகுதியில் வீற்றிருந்தது முற்றிலும் புனரமைக்கப்பட் டு பல்வேறு வண்ணங்கள் பூசப்பட்டு காட்சியளித்தது தூண்கள் தாங்கிய வெளிமண்டபம் மற்றும் அர்தமண்டபம் விமானத்துடன் கூடிய சிறியகருவறை உள்ளே சிறிய வடிவிலான லிங்கமும் எதிரே அதே சிறு அளவில் நந்தியும் வீற்றிருந்தனர் இவை மாத்திரமே அக்காலத்தை சேரந்த்து.

மூலவரின் திருநாமம் கல்வெட்டில் மூலஸ்தானமுடையார் எனவும் நூறாண்டுக்கு முன்னர் ஆவணப்படுத்தும் போது சங்கமேஸ்வரர் என குறிக்கப்பட்டுள்ளார். தற்போது சோமேஸ்வரர் என்று ஊர் மக்களால் வணங்கப்படுகிறார். முற்றிலுமாக பாழ்பட்டு கிடந்த இக்கோயிலை ஊர் மக்கள் டி.வி.எஸ் நிறுவனத்தார் அளித்த நன்கொடையால் மீண்டும் புனரமைத்து கட்டி வழிபாடு நடத்தபடுவதாக அறிந்து மகிழ்வு கொண்டேன்! ஆவணத்தில் காணப்பெறும் அந்த முதலாம் குலோத்துங்க சோழனின் தமிழ் கல்வெட்டை அக்கோயில் சுற்றுபுறத்தில் தேடினேன் கிடைக்க வில்லை! 17 ம்நூ. சேர்ந்த கன்னட கல்வெட்டு மாத்திரம் கீழே படியருகே பதிக்கபட்டிருந்தது.

கோயிலின் புனரமைப்பு பணியின் போது அங்குள்ள பலகை கற்கள் உடைந்த நிலையிலுள்ள தூண்களையும் முன்பு அங்கிருந்த பெரிய கிணற்றில் தள்ளி மூடி விட்டனர் என்று ஊரார் மூலம் அறிந்தேன் ஒருவேளை அந்த கல்வெட்டும் அவற்றினூடே மூடப்பட்டதோ என்னவோ?
கல்வெட்டு-; (எபி.கர்நா.மடலம் 3. எண்.348)

1.ஸ்வஸ்திஸ்ரீ சகரையாண்டு ஆயிர
2.த்து முப்பது பெற்ற வியாசம்(வ)
3.த்சரத்து ஸ்ரீ குலோத்துங்க சோ
4.ழதேவர் ப்ரிதிராஜ்யத்து யாண்
5.டு முப்பத்தெழாவது முடிகொ
6.ஆண்ட சோழ- மண்டலத்துக் கெங்
7.கைகொண்டசோழ-வளநாட்டுக்
8.காரை நாட்டு அனிரலவ..........
9.யிநரய..........
10.டண்மகன் மாச்ச-க........
11.கன் முத்த- காமுண்டா -ஆன சத்ய
12.வாக்ய- காமுண்டனேன்எடுப்பி
13த்த மூலஸ்தானம்- உடையார் கோ
14.யிலும் கட்டின ஏரியும் இட்ட
15.தூம்பும்.......

கல்வெட்டு செய்தி-;
சற்று சிதைந்த நிலையிலுள்ள தமிழ் கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழனின் முப்பத்தேழாவது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது. சக ஆண்டு 1030 என தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. முப்பத்தேழாவது ஆட்சியாண்டு என்றால் 1028 சரியானதாகும் அவ்வாறெனில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட ஆண்டு பொ.யு 1106-07 ஆகும். கல்வெட்டில் ஊர் பெயர் சிதைந்துள்ள நிலையில் முடி கொண்ட சோழ மண்டலத்து கங்கை கொண்ட சோழ வளநாட்டு காரை நாட்டை சேர்ந்த மச்ச காமுண்ட மகனாகிய முத்த காமுண்டா என்கிற சத்யவாக்ய காமுண்டா மூலஸ்தானமுடையார் என்ற இக்கோயிலை எடுப்பித்து, ஏரியையும் வெட்டி, தூம்பும் இட்டுவித்தான் என்று கூறுகிறது இன்றும் இவ்வூருக்கு வெளிப்புறத்தில் " எண்ணெய் ஒலெ கேரே(ஏரி) என்ற பெயரில் ஒரு ஏரி உள்ளது இது இக்கல்வெட்டு கூறும் ஏரியாக இருக்கலாம் !…








 
( மீண்டும் பிறிதொரு கர்நாடக சோழர் கால கோயிலில் சந்திப்போம்..)