20 May 2022

தீப்பாய்ந்துபட்டான்கல், மூலஸ்தானேஸ்வரர் கோயில், தகடூர், நஞ்சன்கூடு, கர்நாடகம்.

கட்டுரை ஆசிரியர்
ஜான் பீட்டர், தாளவாடி

தொல் பழங்காலந்தொட்டே தமிழகத்தின் தவிர்க்க முடியாத கலாச்சார கூறுகளில் ஒன்றாக தனிமனித வழிபாடு என்பது நடப்புலகிலும் தொடர்ந்து நிலை கொண்டுள்ளதை காண்கிறோம். முடியாட்சி காலத்தில் பரவலாக்கப்பட்ட அரச வழிபாடானது மக்களாட்சி மலர்ந்த பிறகும் தாம் சார்ந்த கட்சியின் அரசியல் ஆளுமைக்காகவும் திரைவானின் அபிமான நட்சத்திரங்களுக்காகவும் வாழ முற்பட்டு தமது ஆதர்சநாயகனின் உடல்மொழி, பேசும் பாவனைகளை தம்முள் வலிந்தேற்றி தமக்கான சுயத்தையிழந்து இன்றைய தலைமுறையினர் தனி மனித வழிபாடு என்ற புதைமணிலில் சிக்குண்டு உழல்வதை நாம் கண் கூடாக காண நேரிடுகிறது!

இதன் உச்சமாய் தம் தலைவனின் அரசியல் வாழ்வில் இழுக்கு உண்டாகிலும், அல்லது இயற்கை பிணியினால் பீடிக்கபடுகையிலும் ஆதர்ச கதாநாயகனுக்கு இறப்பு நேரிடினும் அந்த இழப்பை தாளவொட்டாமல் தம்மை தாமே நெருப்பிட்டு வெந்து தணலாகும் விசிறிகளையும் தமிழகம் ஏராளமாய் கண்டுள்ளது. மித மிஞ்சிய தனிமனித வழிபாடு மக்களை இத்தகைய மனநோய்க்கு இட்டுச் செல்கிறது என்பதில் ஐயமில்லை!

நீண்ட நெடிய அக்கால தமிழ் சமூகத்தில் பீடித்திருந்த இந்த மனோபாவத்தை கண்டுதான் கணியனார் "மாட்சியின் பெரியோரை வியத்தல் இலமே! சிறியோரை இகழ்தல் ஆதனினும் இலமே! என பாடினரோ? என எண்ணத் தோன்றுகிறது! இருப்பினும் அக்காலத்தில் தமது அரசன் போர்களத்தில் வெற்றி வாகை சூடவும், மற்றும் நோயின்றி வாழவும் தமது உயிரினை கடவுளர்க்கு காணிக்கையாக படைப்பதை பெரும் வீரச்செயலாக கருதினர்.ஆத்மபலி(உயிர்கொடை) தெய்வத்திற்காகவும்,மத நம்பிக்கை பொருட்டும் நிகழ்வதுண்டு.

அக்காலத்தில் அரசனுக்கும், நாட்டுக்காகவும், ஊர் நலனுக்காக தம் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு அவரது உறவினர்கள் நடுகல் எடுப்பித்து வழிபட்டனர். இறந்த வீரனுக்கு நிலம் தானமாக வழங்கப்பட்டது. அதனை உதிரப்பட்டி நிலம் என அழைத்தனர். கர்நாடக கல்வெட்டுகள் "நெத்தரு கொடுகெ" என இதனை குறிக்கிறது. இத்தகு நடுகல் வீரர்கள் பற்றிய குறிப்புகளை தமிழ் செவ்வியல் இலக்கியங்களான தொல்காப்பியம், சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, புறநானூறு குறிப்பிடப்படுவது போன்றே அக்கால கன்னட சாஹித்யங்கள் பலவும் சான்றுகள் பகர்கின்றன. ஆதிகவி பம்பா இயற்றிய விக்ரமார்ஜூனியம், ஜன்னாவின் அனந்த நாதபுராணம், பந்துவர்மாவின் ஹரிவம்சபூதயா ஆகிய நூல்களில் ஆத்மபலி, நடுகல் வழிபாடு பற்றி கூறுகிறது.

இரவு இருக்கும் வரை மின்னி மறையும் விண்மீன்களை போல தங்கள் இறையான அரசன் இவ்வுலகில் இருக்கும் வரை உயிர் வாழ்ந்த மெய்காப்பாளர் படையினர் ஆபத்துதவிகள், தென்னவன், வேலைக்காரபடை, கைகோளர்படை, என அக்கால தமிழகத்தில் இருந்தது போன்றே கர்நாடகத்திலும் இத்தகைய உயிர் கொடை வீரர்கள் இருந்தனர் அவர்கள் எரே வேசா, ( எரே-தலைவன் வேசா-ஆணை ) வேலவாளி ( வேல-காலம் வாளி-கடமை, பொறுப்பு ) கருடா, மனெ மகன், பிரிய புத்ரா, பிரேமாலய சூதன் என பல பெயர்களில் கன்னட மொழிகல்வெட்டுகள் குறிக்கிறது. இம்மையில் தங்கள் அரசனுக்கு சேவை செய்வது போன்றே மறுமையிலும் விண்ணுலகில் பணி செய்ய வேண்டி உடன் உயிர் துறக்கும் இவர்களை கன்னட பழம் இலக்கியங்களில் "துலிலாள்" "வேலவதிகா" எனவும் விளிக்கிறது.

ஆத்மபலி வீரர்களை பற்றிய அயல்நாட்டு  பயணிகளின் குறிப்புகள்-:
ஸ்ட்ராபோ குறிப்புகளில் 22B.C ஆண்டில் மன்னர் அகஸ்டஸ் அவைக்கு தென்னிந்திய தூதுக்குழுவினர் எண்மர் வருகை தந்தனர் எனவும் பரிசு பொருட்களை அரசருக்கு அளித்து அவர் நட்பினை வேண்டினரென டெமஸ்கஸ் குறிப்பிடுகிறார் அந்த தூதுக் குழுவிலிருந்த ஒருவன் ஏதென்ஸ் நகரில் தீக்குளித்து உயிர் விட்டான் எனவும் அவர்கள் மத நெறி முறைப்படி உலகவியல் துன்ப நிகழ்வுகளிலிருந்து விடுதலை பெற விழைந்து உடலெல்லாம் நறுமண தைலம் பூசிக் கொண்டு புன்முறுவலுடன் நெருப்பில் பாய்ந்து உயிர் துறந்தான் இங்கு படுத்திருக்கிறான்" எனவும் அவன் சமாதியில் எழுதப்பட்டது, என்ற குறிப்பை தருகிறது.

அபூஜைது (கி.பி.916) தென்னிந்திய வருகையின் போது அவரது குறிப்பில்-:
அரசனது முடிசூட்டு விழாவில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் சிறப்பாக சமைத்த சோற்றை வாழை இலையில் படைத்து அரசனுடன் ஒன்றாக அமர்ந்து உண்ணும் அமைச்சர்கள், மெய்க்காப்பாளர்கள், நண்பர்கள் அனைவரும் அன்றிலிருந்து தோழமை, விசுவாசம் என்ற கயிறினால் பிணைக்கபட்டதாக கருதி போரின் போது அல்லது இயற்கையாகவோ அரசன் இறந்து போனால் அந்த இறுதி சடங்கில் அரசனுடன் விருந்து உண்ட அனைவரும் தாங்களாகவே முன் வந்து நெருப்பில் குதித்து உயிர் விட்டனர்.

13ம் நூ. தென் தமிழகத்திற்கு வருகை புரிந்த மார்கோ போலோ (பொ.யு.1293). அரசன் இறந்தவுடன் அவன் சிதையில் விழுந்து உயிர் துறந்த பிரபுக்கள், பணியாளர்கள் பற்றி குறித்துள்ளார். அதற்கடுத்து 14நூ. சோழநாட்டிற்கு வருகை தந்த ஒடெரிக் துறவி (1321-22) கோயில் திருவிழாவின் போது பக்தி பரவசத்துடன் ஓடும் தேர்கால்களில் விழுந்து உயிர் துறந்த பக்தர்களையும் ஆத்மபலி சடங்கை பற்றி குறித்துள்ளார்.

உயிர்கொடை வீரன் தாமாகவே முன்வந்து உயிர் பலி கொடுக்க போவதை மக்களிடம் முன்னதாகவே அறிவித்து இறுதி விருந்தை உண்கிறான். பின்னர் கழுத்தில் தொங்குகின்ற 5 கட்சிகளில் ஒன்றை கொண்டு தனது தசையை அறுத்து கடவுளர் சிலையின் முகத்தில் வீசுகிறான் இறுதியில் "எனது உயிர் இறைவனுக்கு படைக்கபடுகிறது" என உரத்து கூறியவாறு தனது சிரத்தை தானே கொய்து மாண்டு போகிறான் என கூறுகிறார். ஏறக்குறைய இதே 14நூற்றாண்டில் தமிழகத்திற்கு வருகை தந்த ஜார்டனஸ் துறவி (பொ.யு.1323-1330) தலை பலி சடங்கை பற்றி குறித்துள்ளார்.

இந்த உயிர் கொடையாளர்களின் அறம், வீரம், அர்பணிப்பு அரசபற்று ஆகிய பண்புகளை வெளிப்படுத்தும் முகமாக பல்வேறு முறையில் உயிர் பலி மரபினை பின்பற்றினர். தமிழகத்தில் தனது சிரத்தை தானே அரிந்து கொள்ளும் அரிகண்டம் இன்னொரு நபர் மூலம் தலையை வெட்டி யெடுக்கும் சாவாரபலி, தமது உடம்பை 9 பாகங்களாக வெட்டிக் கொள்ளும் நவகண்டம், மூங்கில் மரத்துடன் தலையை சேர்த்து கட்டி வெட்டுண்ட தலை மூங்கில் மரத்தில் தொங்கும் "தூங்கு தலை" முறை ( கர்நாடகத்தில் சிடிதல ) போன்ற இம்முறைகளில் மட்டுமின்றி கர்நாடகத்தில் மேலும் பல முறைகளில் ஆத்மபலி சடங்கு நடைபெற்றதை அறிந்து வியப்பிலாழ்கிறோம். 

உயரமான மலை முகட்டிலிருந்து விழுந்து உயிர்துறப்பது" 
மன்னர் இறந்த பின்னர் அவர் உடலை தமது மடியில் கிடத்தி உயிருடன் மண்ணுக்குள் புதைக்கபடும் முறைக்கு "கீழ்குந்தெ" எனப்படும் (கங்க அரசன் நிதிமார்கா தொட்டஹுண்டி நடுகல் கல்வெட்டு) உயிருடன் தோலை உரித்து கொள்வது, பாய்தோடும் புனித நதி பிரவாகத்தில் மூழ்கி உயிர் துறத்தல் ( சாளுக்கிய அரசன் ஆகவமல்லன் ) தீயில் பாய்ந்து உயிர் துறப்பது என இவ்வகையான முறையில் தீப்பாய்ந்து பட்டான் என்ற அபூர்வ வகை நடுகல் ஒன்றினை காணும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன் அவற்றை இங்கு காண்போம்.

நடுகல் அமைப்பு-:
4 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட சதுர வடிவிலான பலகை கல்லில் மூன்றடுக்கு நிலை நடுகல் கீழிருந்து மேலாக-:

முதல் நிலையில் உயிர்பலி வீரன் மார்புக்கு நேராக இரு கரங்களை மடக்கி சேவித்த வாறு நின்ற நிலை. அடுத்து எரிகின்ற அக்னி குண்டத்தில் பாய்வது போன்று காட்சி படுத்தப்பட்டுள்ளான்.

இரண்டாம் நிலையில் தீயில் பாய்ந்து உயிர் துறந்த வீரனின் ஆன்மா இரு தேவகன்னியர்களின் கரம் பற்றி விண்ணுலகம் செல்லும் காட்சி.

மூன்றாம் நிலை இருமருங்கும் தேவகன்னியர் கரங்களில் வெண் சாமரமேந்தி ஆடல் கோலத்தில் காட்சியளிக்க நடுவே ஆத்மபலி வீரன் இருக்கையில் சுகாசனத்தில் அமர்ந்து அபயஹஸ்தம் காட்டியவாறு வடிக்கப்பட்டுள்ளான். இடையே கல்வெட்டு சிதைந்த நிலையில் உள்ளது. இத்தகு தீப்பாய்ந்து பட்டான் நடுகற்கள் 10 நூற்றாண்டுக்கு பிறகான காலக்கட்டத்தில் காணகிடைப்பதில்லையென கன்னட நடுகல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


தற்காலத்தில் ஒரு நிகழ்வு அல்லது சூழலை வெறுத்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் செயற்பாடாக போராட்ட வடிவம் பெற்று தீக்குளிப்பு என்பது அறவழி போராட்ட மாக கருதி இனம், மொழி காக்க நடந்தாலும் அக்காலத்தில் பெருமளவு கர்நாடகத்தில் நடைபெற்ற நிலை மாறி இந்த தீக்குளிப்பு நிகழ்வுகள் அங்கு தற்போது அருகிய நிலையிருப்பதும் தமிழகத்தில் மாத்திரமே இன்னும் தொடர்கதையாக நீண்டிருப்பதும் வருந்த தக்கது!

கட்டுரை ஆசிரியர். ஜான் பீட்டர்

No comments:

Post a Comment