1 January 2020

வேழக் காடுகளில் சோழச் சுவடுகள் - கங்கபாடி, நுளம்பபாடி, தக்ஷிணகர்நாடகா பகுதிகளில்.....

Article by  John Peter.

இராஜராஜ சோழன் கைக்கொண்ட கங்கபாடி நுளம்ப்பாடி என்பது தற்போதைய தென்கர்நாடக பகுதிகளான பெங்களூர், சிக்கபெல்லாபூர், கோலார், முல்பாகல்,மைசூர்,மண்டியா சாம்ராஜ்நகர்,குடகு மாவட்டங்களை உள்ளடக்கியது. இவற்றை கங்கர்களும் நுளம்பர்களும் மாறி மாறி அரசாண்டு வந்ததை சான்றுகள் மூலம் அறிகிறோம்.வேழக்காடுகள் நிறைந்து காணப்படும் இக்கங்க தேசத்தின் அரசு இலச்சனையும் யானைதான்! இங்குள்ள பழங்கால கோயில்களில் யானை சிற்பத் தொகுதிகள் மிகுதியாக வடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

பிற்கால சோழர்கள் பொறுத்த வரையில் பராந்தகசோழனின் ஸ்வதிஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரி எனத் தொடங்கும் 29வது ஆட்சியாண்டு நடுகல் கல்வெட்டு முல்பாகல் பைராகூர் என்னுமிடத்தில் கிடைக்கிறது இது பராந்தக சோழனின் ஆளுகையில் அவனது சகாவான கங்க மன்னன் பிருத்விக்கு அளிக்கப்பட்ட பகுதியாக இருக்கலாம். மேலும் நரசிம்மாச்சாரியார் தமது (1906-11) ஆண்டு ஆய்வறிக்கையில் செ.பட்டனக்கருகே கூடலூர் என்னுமிடத்தில் கிடைத்த தொடக்கம் முடிவில்லாத நடுப்பகுதி ஒருவரிக் கல்வெட்டில் நீண்ட கரங்கங்களில் வாளைப்பற்றிய pattani para nadan கூடலூரில் வாசம் புரிபவன் என்ற பொருள் தரும் செய்தி எந்த சோழனுக்கும் பொருந்தாததால் விஜயாலய சோழனை குறிப்பதாகவிருக்கலாம் என ஐயமுறுகிறார் ஆனால் இதற்கு எந்த ஆதாரமோ சான்றுகளோயில்லை! முறையாக இராஜராஜன் காலத்திலிருந்தே கல்வெட்டுகள் இங்கு ஆண்டுவாரியாக கிடைக்கிறது. அதுவும் இராஜராஜனின் ஆரம்பகாலக் கல்வெட்டுகள் குறிப்பாக சாம்ராஜ் மாவட்டத்தில் உள்ள பன்னூர்,கெம்பனபுரா,ஹொங்கனூர் பகுதிளில் கிடைக்கிறது அருண் மொழி வர்மன் அவனது அரும்புதல்வன் இராஜந்திரனும் தென் கர்நாடக பகுதிகள் முழுவதையும் பல போர்களின் மூலம் கைக் கொண்டதையறிகிறோம்.

கர்நாடக போர்கள்-: தலைக்காட்டுக்கருகே கலியூர் என்னுமிடத்தில் பொ.யு 1006 ம் ஆண்டு நடைபெற்ற போரில் சோழ படைகளை தலைமை தாங்கி அப்ரமேயன் கர்நாடக அரசுகளின் கங்கர் ஹொயசாளர் உட்பட 18 அரசர்கள் கொண்ட கூட்டுப் படையை முறியடித்து வெற்றி கண்டார். ஹூப்ளிக்கருகே மாலம்பி என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டில் பானசோகே என்னுமிடத்தில்1004 ம் ஆண்டில் நடைப்பெற்ற போரில் இராஜேந்திரன் கீழ் சிறப்பாக செயலாற்றிய மானிஜா என்ற படைத்தளபதிக்கு இராஜராஜனின் விருது பெயரான க்ஷத்ரியகுலசிகாமணிகொங்காள்வான் என்ற விருது பெயரை சூட்டி மால்வியா என்ற அப்பகுதியை பரிசாக கொடுத்ததையறிகிறோம்.

பெலகோலா படையடுப்பு-: பலமூரி அகஸ்தீஸ்வரா கோயிலில் உள்ள இராஜராஜனின் 28 வது ஆட்சியாண்டு (பொ.யு1012) கல்வெட்டு இராஜேந்திரன் பெலகோலா நாட்டின் மீது படையெடுத்து செல்வதை குறிப்பிடுகிறது இப்படையெடுப்பு சாளுக்கிய மன்னன் ஐந்தாம் விக்ரமாதித்யனுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது என கர்நாடக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இங்ஙனம் தலைக்காட்டிலிருந்து தலைகாவேரிபகுதியாம் குடகு வரை தென் கர்நாடகாவின் பெரும்பகுதியை கைப்பற்றிய சோழர்கள் ஏனைய பிற தேசங்களைப் போலன்றி இதனை தங்களது நேரடியாட்சியின் கீழ் கொணர்ந்தனர் காரணம் புனலாடும் பொன்னி நதிக்கரையின் வளமான வண்டல் மண் பூமியும் நயமான நன்செய் நிலங்களும் காவேரி காவலர்களை கவர்ந்ததில் வியப்பேதுமில்லை. வெற்றி கண்ட பகுதிகளில் சோழர்களின் கீழடங்கி கர்நாடக வம்ச அரசர்கள் சோழர்கள் விருது பெயர்களைத் தாங்கி ஆட்சி புரிந்ததையறிகிறோம் குடகு தேசத்தின் தென் பகுதிகளை கொங்காள்வார்கள் கொங்கு மண்டலத்தை ஆண்ட கொங்கு சோழர்கள் போன்றே சோழர்கள் பெயர்தாங்கி க்ஷத்ரிய குல சிகாமணி கொங்காள்வான், இராஜேந்திரசோழ கொங்காள்வான் ராஜாதி ராஜ கொங்காள்வான் வீர சோழ கொங்காள்வான் என வம்சாவளியாக அரசாண்டனர் வட குடகு பகுதிகளை செங்காள்வார் என்ற வம்சத்தினரும் வீர ராஜேந்திர நன்னி செங்காள்வான் ராஜேந்திர சோழ செங்காள்வான் போன்ற அரசர்கள் அவரது வம்சத்தினரும் இரண்டு நூற்றாண்டு கள் வரை பலமிக்க அரசர்களாக திகழ்ந்த்தையறிகிறோம்.

இதே போன்று மண்ணின் மைந்தர்களாம் கங்க அரசர்களும் சோழர்களின் மேலாண்மையை ஏற்று ஆட்சி புரிந்தமைக்கு சான்றாக மண்டியா மாவட்டத்தில் ஹள புதனூரில் இராஜேந்திரனின் 13 வது ஆட்சியாண்டு கல்வெட்டு இவனது மெய்கீர்த்தியோடு தொடங்கி ராக்காச கங்கன்(இரண்டாம்) அளித்த நிலதானத்தை குறிப்பிடுகிறது மேலும் கோலார் மாவட்டத்தில் தேரஹள்ளி கோயில் கல்வெட்டு மஹாமண்டலேஸ்வரனான உத்தம சோழ வீரகங்க வழங்கிய தானத்தை குறிக்கிறது.

சோழர் நிர்வாக முறை-: கர்நாடகத்தில் இராஷ்டிர, கங்கர் ஆட்சிகளில் இல்லாத நிர்வாக முறையை சோழர்கள் கொணர்ந்தனர் கங்கபாடியும் நுளம்பபாடியும் முடி கொண்ட சோழ மண்டலம், நிகரிலி சோழ மண்டலம், விக்ரம சோழ மண்டலம் என மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கங்கை கொண்ட சோழவளநாடு, விருத்தராச பயங்கரவளநாடு என பல வளநாடுகளாக பிரிக்கப்பட்டன கங்க நாட்டின் தலைநகராம் தலக்காடு இராஜராஜபுரம் என பெயர் மாற்றம் பெற்றது பிரம்ம்தேசங்கள் உருவாக்கப்பட்டன கோயில்கள் எழுப்பப்பட்டன பெரும்பாலும் ஒற்றை கற்றளிகள் தான்! கர்நாடகத்தில் சோழ நிர்வாக முறையை சீர்படுத்தி செப்பனிடவும் சோழநாட்டைச் சேரந்த அனுபவமிக்க உயரதிகாரிகள் படைத்தலைவர்கள் இங்கு அனுப்பி வைக்கப்பட்டத்தை கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம் தஞ்சை பெரிய கோயிலின் திருச்சுற்றாலையை கட்டிய நாரக்கண் கிருஷ்ணன் இராஜேந்திர பிரம்மராயன் அவனது மகன் உத்தம சோழ பிரம்மராயன் குவலாள நாட்டிற்கும், சோழ நாட்டின் நில அளவீட்டு பணியாற்றிய பெருநகரத்து சேனாபதி குரவன் உலகளந்தான் இராஜேந்திர சோழஜெயமூரி நாடாழ்வான் இவன் முறையே இராஜராஜன் இராஜேந்திரன் காலத்தில் பணியாற்றியவன் இவன் தலைக்காடு பகுதிக்கு வந்தமையை தடிமாலிங்கி ரவிகுல மாணிக்க விண்ணகரத்திலுள்ள கல்வெட்டு மூலம் அறிகிறோம். இங்ஙனம் நிர்வாக முறை சிறப்பாக செயல்பட்டு சோழர்களின் ஆட்சியில் கர்நாடகம் அமைதியாக எவ்வித குழப்பமின்றி திகழ்ந்தது என்பதற்கு ஆதாரமாக நஞ்சன்கூடு சாலிகுண்டாவிலுள்ள இராஜேந்திரனின் பொ.யு 1021ஆண்டு கல்வெட்டு இடைதுறை நாடுள் - பதிநீக்கி என நல்லாட்சி நிகழ்ந்ததற்கு சான்று பகிர்கிறது மேலும் முல்பாகல் ஆவணி இராமேஸ்வர கோயிலில் வீர ராஜேந்திரன் கல்வெட்டு சந்ததியின்றி இறந்தவர்களின் உடைமைகளை தர்மமாக வழங்க வேண்டுமென்ற அறநெறியை போதிக்கிறது.

சோழநாட்டில் நிலக்கிழார்கள் எவ்வாறு ஆதிக்கம் பெற்றிருந்தார்களோ அதே போன்று தென் கர்நாடகத்தில் காமுண்டர்கள் செல்வாக்கு மிக்க நிலச்சுவான்தார்களாக திகழந்தனர் இவர்கள் தொடர்பான கல்வெட்டுகள் எல்லாம் நிலம்,நீர்பாசனம் வேளாண்மை யை குறிப்பதாக உள்ளது மேலும் பேர்மாடி காமுண்டன் மகன் இராஜராஜவேளான் என்ற சொற் தொடர் இதனை உறுதி செய்கிறது இவர்கள் அரசு நிர்வாகத்தில் நியமிக்கப்பட்டு சீரிய பங்கேற்றனர் என்பதை கண்டராதித்ய சோழ காமுண்டா உத்தம சோழ காமுண்டா நால்கவுண்டழகியசோழா என்ற பெயர்கள் உறுதி செய்கின்றன.
.
சோழநாட்டு வணிகர்கள்-; சோழராட்சி கங்க நாட்டில் 120 ஆண்டுகள் நிலை பெறுவதறக்கு மூல காரணமாக திகழ்ந்தவர்கள் இவ்வணிகர்களே! நானாதேசிகர் திசையாயிரத்து ஐந்நூற்றுவர் நானூற்றுவர் முன்னூற்றுவர் வீரபலஞ்சியர் என்ற குழுவினர் ஆற்றிய பொதுப்பணிகள் ஏராளம் சமுதாயத்தில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த இவர்கள் கற்றளி எழுப்புதல் அவற்றிற்கு நிலதானம் அளித்தல், குளம், ஏரி வெட்டுதல் போன்ற நற் காரியங்களையாற்றினர் மேலும் இவர்கள் அரசர்கு இணையாக வெண்கொற்றகுடை, மெய்கீரத்தி இவற்றை பயன்படுத்தமளவிற்கு திகழந்தனர் மாளூர் பட்டினம், கள்ளம்பர் நகரம் ஜனநாதபுரம் ஆயகண்டபுரம் போன்றவை முக்கிய வணிகதலங்களாக திகழ்ந்தன.கங்கமண்டலதேசி, இருமுடி சோழமயிலட்டி, ராஜேந்திர சோழசெட்டி போன்ற பெயர்கள் கல்வெட்டுகளில் காண்கிறோம் மேலும் சாம்ராஜ்நகர் ஹள ஆலூர் சோழர் காலத்தில் தென்னகத்தின் அய்யபொழில்( அய்ஹோளே) என குறிப்பிடுமளவிற்க்கு வணிகர்கள் கூடும் முக்கிய தலமாக திகழந்தையறிகிறோம்

இங்ஙனம் கங்க தேசத்தில் ( சாம்ராஜ்நகர், குண்டல்பேட்டை மாவல்லி,சென்னபட்னா ,T.நரசிபுரா.

மண்டியா, மத்தூர், கோலார்,முல்பாகல் சிக்பெல்லாபூர்) சோழச்சுவடுகளை ஆவணங்களின் துணை கொண்டு தேடியதில் பெரும்பாலான கல்வெட்டுகள் காணக்கிடைத்தில. சோழர்காலகோயில்கள் உருக்குலைந்து பொலிவின்றி காட்சிதருகிறது சில ஊர்களில் கற்றளி இருந்ததற்கான சாட்சியமேயில்லை! ( ஹள ஆலூர் மூலஸ்தானமீஸ்வரமுடையார் கோயில்). 

வேதனையுடன்.....அடுத்த பதிவில்!







No comments:

Post a Comment