25 June 2021

வேழக்காடுகளில் சோழச்சுவடுகள் - இராமேஸ்வரர் திருக்கோயில், தேபூரு, மைசூர்.

சொர்ணபூமியாம் கர்நாடகத்தின் தொன்மை கூறும் நல்லுலகம் B.L.ரைஸ் என்ற தொல்லியல் அறிஞருக்கு மெத்தவும் கடமைப்பட்டிருக்கிறது. கர்நாடகத்தில் தொல்பொருள்ஆய்வுதுறை இயக்குநராக 20 ஆண்டுகளாக(1885-1906) பணியாற்றிய  இவர் பழைய மைசூர் சமஸ்தானத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 9367 கல்வெட்டுகளை கண்டறிந்து அவற்றை அச்சிலேற்றி எபிகிராபிகா கர்நாடிகா என்ற பெயரில் 12 மடலங்களாக வெளியிட்டார். இந்த மகத்தான பணியை அடியொற்றி இவரின் சீடர் R.நரசிம்மாச்சார் (1906-26) மைசூர் பகுதிகளில் ஆய்வுகளை நடத்தி மேலும் பல கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு ஆவணங்களாக வெளிவந்தது இவ்விரு மேதைகளின் கடும் உழைப்பின் அடித்தளத்தில்தான் கர்நாடக சரித்திரத்தின் சாரம்சம் கட்டமைக்கப்பட்டுள்ளது எனலாம். அதிலும் குறிப்பாக ஒரு நூற்றாண்டிற்கு மேலாக கர்நாடகத்தில் ஆட்சிபுரிந்த சோழர்களின் தடயங்கள் வெளிஉலகிற்கு அறியபடாமலே போயிருக்கும்.

சோழர்கள், தமிழகத்தில் கட்டிய பிரம்மாண்ட கோயில்கள் போலன்றி இங்கே எளிமையான ஒற்றைதளி கோயில்களையே கட்டுவித்தனர். அவற்றில் ஒன்றிரண்டை தவிர ஏனைய கோயில்கள் பிற்கால அரச வம்சத்தவரால் புனரமைப்பு மற்றும் விரிவாக்க பணி மேற்கொள்ளப்பட்டாமல் வெறுமனே விடப்பட்டு சிதைந்த நிலையிலுள்ளது. கல்வெட்டுகளும் தமிழகத்தை போல அதிட்டானத்திலும் கோயில் சுவர்களிலும் வெட்டபடாமல் துண்டு பலகை கற்களில் தங்கள் நிலதானம் மற்றும் கொடைகளை கல்வெட்டுகளாக பொறித்து கோயில் முன்பு நட்டு வைத்தனர். அவை  காலவோட்டத்தில் உடைந்து துண்டுகளாகி மாயமாகி போனதுB.L.ரைஸ் மற்றும் நரசிம்மாச்சார் அவர்களின் ஆய்வுக்கு பின்னர் ஏறத்தாழ நூற்றாண்டுக்கு மேல் சோழர் கோயில்கள் கல்வெட்டுகள் பற்றிய நேரடி கள ஆய்வு மேற்கொண்டதாக அறிய இயலவில்லை

எனவே நாம் மைசூரில் வசிப்பதாலும் பணி நிமித்தமாக தாளவாடிக்கு அடிக்கடி பயணப்படுவதாலும் இச் சோழர் காலக்கோயில்களை நேரிடையாக சென்று காணும் பேறு பெற்றேன் அவற்றை "வேழக்காடுகளில் சோழச்சுவடுகள்" என முகநூலில் பதிவிட்டும் வருகிறேன்! அவ்வகையில் இம்முறை நஞ்சன்கூடுக்கருகே தேபூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள முதலாம் குலோத்துங்கன் காலத்திய கோயிலுக்கு செல்வது என முடிவெடுத்து அதிகாலையிலேயே புறப்பட்டேன். பொதுவாக ஆவணங்களின் குறிப்புகள் துணை கொண்டு செல்லும் அக்கோயில்களின் வழியை முதலில் கண்டறிவது கடினம் பெரும்பாலும் பிரசஸ்தி பெறாத கோயில்களில் மூன்று கால வழிபாடு நடைபெறாது ஊர் பெரியவர் ஒருவர் ( லிங்காயத்து வகுப்பினர்) பூசாரியாக பொறுப்பேற்றிருப்பார். காலை வேளையில் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தபின்னர் தனது சொந்த வேலையை கவனிக்க சென்று விடுவார்அதன்பிறகு கோயில் மூடியிருக்கும் மேலும் செல்லும் வழிகளில் தென்படும் நடுகற்களை படமெடுப்பதும் காலைவெளிச்சத்தில் சுலபம் ஏனெனில் நடுகற்கள் கிழக்கு திசை நோக்கியே அமைந்திருக்கும் இக்காரணங்கள் பொருட்டே காலை பயணம் உசிதமானது என கருதுகிறேன்!

தேபூரு மைசூரிலிருந்து தெற்காக 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது முதலில் நஞ்சன்கூடு சென்று அங்கிருந்து குண்டல்பேட்டை செல்லும் சாலையில் 7 கி.மீ தொலைவிலுள்ள தேபூரை சென்றடைந்து அக்கோயில் குறித்து விசாரிக்கையில் ஊருக்குள் இல்லாமல் குடியிருப்பிற்க்கு வெளியில் உள்ளது என அறிந்து மகிழ்ச்சி கொண்டேன்!. ஊராரின் சந்தேக கண் கொண்ட பார்வைகள் கிடுக்கிபிடி கேள்வி கணைகள் போன்ற அசௌரியம் ஏதுமின்றி சுதந்திரமாக கோயிலைச் சுற்றி வரலாம் என ஆனந்தத்துடன் பயணத்தை தொடர்ந்தேன்சிறிது தொலைவு சென்றவுடன் இராமேஸ்வரர் கோயில் செல்லும் வழி என்ற பெயர் பலகையை கண்டு வலது புறத்தில் திரும்பியவுடன் அங்கு கபினி ஆறு சிறு ஓடையாக பிரிந்து சென்று கொண்டிருந்தது அதன் மேல் அமைக்கப்பட்ட பாலத்தின் மீது ஏறி கடந்து ஒரு ஒற்றையடி செம்மண் பாதையை அடைந்தேன்! காலை நேரமாதலால் சிறுவர்கள் பாலத்தின் மேலிருந்து நீருக்குள் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர்!

தேபூரு கபினி ஆறு பாய்ந்தோடும் கரையில் அமைந்த செழிப்பான ஊர் என்பது புலப்படலாயிற்று. சோழர்கள் சங்க காலத்தில் வளவன் என அழைக்கப்பட்டதும் வளமான பகுதிகளை ஆட்சி பரப்பாக கொண்டவர்கள் என்பதை அந்நிய மாநிலத்திலும் நான் அறிய நேரிட்டது! ( இதற்கு தானா ஆசைப்பட்டாய் அருண் மொழிவர்மா?)

ஒற்றையடி பாதையில் இருமருங்கும் பசும்போர்வை போர்த்தியது போன்று பச்சை பசேல் என வயற்பரப்பு.கபினி ஆற்றுநீர் வாய்க்காலில் சலசலவென வழிந்தோடும் போது எழும் இனிமையான ஓசை! இளங்காலை பொழுது ஆதவனின் கதிர்கள் பயிர்களின் படிந்திருக்கும் பனித்துளியில் பட்டு தெறிக்கும் ஒளிக்கீற்றும் சோழர் கோயில் காண போகிறோம் என்ற உற்சாகமும் மனதில் தொற்றிக் கொள்ள 2 கி .மீ மேல் அந்த ஒற்றையடி பாதையில் பயணித்து இராமேஸ்வரர் கோயில்வந்தடைந்தேன்வாழை,கமுகு, தென்னை தோப்புகளின் அருகில் பெரிய அரச மரத்தின் கீழ் கோயில் அமைந்திருந்தது முற்றிலும் புதிதாக கட்டப்பட்டிருந்தது( T.V.S குழுமத்தினர் பொருளுதவி செய்தனர் என்பதை அறிந்து கொண்டேன் இதே போன்று சிந்துவல்லி என்ற ஊரில் சிதைந்த நிலையிலுள்ள சோழர் கால கோயில் கட்டுவதற்கும் பொருளுதவி செய்ததை குறிப்பிட்டுள்ளேன்!) சோழர் கால கட்டிடகூறுகளின் எச்சங்கள் ஏதுமின்றி முற்றிலும் மாற்றப்பட்ட நிலையில் இவ்வூரார் மெச்சதக்க ஒரு செயலை செய்துள்ளனர். கோயில் புனரமைப்பின் போதுஉடைந்த நிலையில் ஆங்காங்கே சிதறி கிடந்த நடுகற்கள் கல்வெட்டுகளைசேகரித்து கோயிலின் முன்புறத்தில் வரிசைகிரமமாக நட்டு வைத்துள்ளனர்.

கர்நாடகத்தில் பல கோயில்களில் ஆவணத்தில் குறிப்பிடப்படும் கல்வெட்டுகள் மாயமாகி போன நிலையில் இங்கு அப்படியே கிடைப்பது உள்ளமட்டிலும் மனதிற்கு பெரும் மகிழ்ச்சி தந்த நிகழ்வாகும்கங்கர் கல்வெட்டுகள் ÷ கங்கர் காலத்தை சேர்ந்த இரண்டு கல்வெட்டுகளும் சோழர் காலத்தை சேர்ந்த இரண்டு கல்வெட்டு களும் ( fragmentary inscriptions) இங்கு காணக்கிடைக்கின்றன. கங்க அரசன் சிவமாறனின் கல்வெட்டு (பொ.யு.8நூ) நஞ்சை நிலம் தானமாக வழங்கியதையும் அக்காலத்தில் இவ்வூர்  புன்னாடு6000 என்ற நாட்டை சேர்ந்தது என்பதையும் குறிப்பிடுகிறது மேலும் மற்றொரு ஹள கன்னட மொழி கல்வெட்டு கங்க அரசன் ராச்சமல்ல பெருமானடி ( பொ.யு.9ம் நூ) காலத்தை சேர்ந்தது. கங்கர் காலத்தை சேர்ந்த இக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் மீண்டும் புனரமைப்பு செய்து கட்டப்பட்டிருக்கலாம்

சோழர் கால கல்வெட்டுகள் ÷ முதலாம் குலோத்துங்க சோழனின்" புகழ்மாதுவிளங்க செயமாது விரும்ப" என்ற மெய்கீர்த்தி முப்பத்தொன்றாவது ஆட்சி யாண்டை (1100-01A.D) குறிப்பிட்டு அக்காலத்தில் இவ்வூர் மும்முடி சோழ மண்டலத்தை சேர்ந்தது என்பதையும் கூறுகிறது.

மற்றொரு ஆட்சியாண்டு குறிப்பிடாத ஏறத்தாழ இதே கால கட்டத்தை (பொ.யு12 நூற்றாண்டு) சேர்ந்த சிதைந்த கல்வெட்டு இக்கோயிலுக்கு வழங்கிய நிலதானம் பற்றி குறிப்பிடப்படுகிறது கல்வெட்டு ÷

1....ளர்கள் மு(ன்)..
2....(ணி)யரும் சகர யாண்...
3.... மூன்று சென்ற விக்கிர()...
4...ங்குனி உத்திரத்துத் திருவி...
5..யார் தீ()த்தம் பிரசாதித்.....
6..ருந்த திருவோலக்க-மண்ட
7...யிருந்து செய்த தன்மகாரிய..
8...களூர்த்- திருவீராமீஸ்வரமுடைய...
9...எங்கள் முதுக்கன் விட்டு அன்...
10..(மு)ன்()தியாய் வருகிற தேவதான..
11..(னு)வாகி...ர் கோயிலுக்கு கிழக்கு
12....ம்மா(தே)கால்லுக்கு மேற்கும்தெ
13....நட்டு நின்ற புண்ணக...
14...ற்கு -கான()ற்கு நெ..(ழு)ந்..
15...யில் (வாய்பும்)..
16....(நோக்கி) வந்த ...
17..(தோ)ம் இந்நிலத்தால் வி...
18.விற்ரமரும் நாங்களும் ()...
19..த்தோம் இந்த ஸ்தானம் உடைய ()..
20...ஊராரேய் இபோகங் கை-கொ(ண்
21.ந்த தன்மம் ரக்ஷிக்க-கடவார் இவர் வச
22. ம் விட்டோம் இந்த தேவதானம் வி
23..ளைந்த போகத்துக்கு வந்த குறைவுநி
24.றைவு உளவாகில் நாங்களே தந்தது நி
25.லை நிறுத்தி இத்தன்மம் (சோ)ட்டன்வைக்க()
26.டவோம்-ஆகவும் இந்த தன்மம் அழிப்பான் கங்கை
27.கரையில் கவிலைக்-கொன்ற பிரம
28. வத்தி எய்துவான் அறமாறவர்க்கு கறமல்லாது துணையி
29.ல்லை00ஊர்புகில் புட்டிகையும் இவ்வூரில் விளை
30.ந்த போகத்தில் சிற்றூரையும் விட்டோம்....

கல்வெட்டு செய்தி ÷
(எனது ஆசான் கல்வெட்டறிஞர் இராஜகோபால் ஐயா அவர்களின் விளக்கம்....)
சக ஆண்டு/விக்கிரம ஆண்டு =பொ..11001160. பங்குனி உத்திரதிருவிழா இறுதியில் தெய்வம் புண்ணிய தீர்த்தமாடி, ஒலக்க மண்டபத்தில்( கொலுமண்டபம்) இருந்த போது இந்த தர்ம செயலை முடிவு செய்துள்ளனர் அதன்படி திருவீராமீஸ்வரமுடையார் கோயிலுக்கு கோயில்/ஊர் பொறுப்பிலும் நிலங்கள் தவிர்த்து அவர்கள் வழியாக வருகிற தேவதான நிலங்களுக்கு (முன்வதி) வரிச்சலுகை/ வருவாய் தர ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது. அந்த குறிப்பிட்ட நிலத்தின் நான்கு எல்லைகளும் கூறப்பட்டுள்ளது. வாகீஸ்வரர் கோயிலுக்கு கிழக்கு.. கால்லுக்கு மேற்கு , என்று குறிப்பிடப்பட்டுள்ளதுஒரு எல்லையில் புண்ணகம் நட்டு நின்றுள்ளது இது செண்பகம் புன்னை மரமாகலாம் வேறுவகையில் நடப்பட்ட எல்லை கல்லாகலாம். வில்தமர், நாங்கள் (ஊரார்) கோயில் ஸ்தானத்தார் நிலபோகம் ( விளைச்சல்) கொண்டு பரிபாலிக்க வேண்டும். இந்த போகம் கையில் கொண்டு விளைச்சல் கூடுதல் குறைவு என்றாலும் அவர்கள் சரி செய்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும்ஊர் புகுவாரிடம் பெறும் புட்டிகைவரி நிலவிளைச்சலுக்காண சிற்றுரைவரி ஆகியனவும் வழங்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு இறுதியில் வருகின்ற "அறமாறவர்க்கு அறமல்லாது துணையில்லை" என்ற சொற்றொடரானது கர்நாடகத்தில் வணிககுழுவினர் தானக் கல்வெட்டுகளில் பயின்று வருவதை காண்கிறோம்

கட்டுரை
ஜான் பீட்டர், தாளவாடி





















தொடரும்... 

No comments:

Post a Comment