30 May 2020

மறைந்து கிடக்கும் மலையக வரலாறு


கவிகுடி பெருங்கற்காலகுகை,  நாயக்கர்கால கல்மண்டபம், ஹளெகன்னடம் பாறைக்கல்வெட்டு மேலும் பல செய்திகளுடன்....,  

ஜான் பீட்டர்.
முன்னால் தொல்லியல் துறை



கங்கர் காலத்திய ஆநிரை நடுகல்லை கண்டறிந்து புகைப்படம் எடுத்த பின்னர் கவிகுடி என்ற மலைக்குன்று கோயிலைக் காண நான், மனோ, மாணவன் அபிஷேக் மூவரும் இரு சக்கர வாகனங்களில் புறப்பட்டோம் சுமார் இரண்டு கி்மீ. வரை பயணப்பட்டு பழங்குடி இனத்தவர் (சோளகர்) வசிப்பிடத்தையடைந்தோம் அதற்கு மேல் இரு சக்கர வாகனத்தில் செல்லவியலாது என அறிந்தவுடன் வாகனங்களை அங்கேயே நிறுத்தி விட்டு ஒற்றையடி பாதையாக செல்லும் வனப் பகுதிக்குள் நடக்கலானோம் ....

அது கோடைக் காலமாதலால் வனம் பசுமையிழந்து மரம் செடி கொடிகள் உதிர்ந்து சருகுகள் விரவிக் கிடந்தன இவ்வாறு ஒரு மைல் காத தூரம் கடந்தவுடன் ஒரு காட்டாற்றையடைந்தோம் அது நீரின்றி வறண்டு கிடந்தது அங்கு பெருங்கற்கால கருவிகள் சிறிய அளவிலான கைக் கோடரிகள் (celt)சிலவற்றை சேகரித்தோம் இவை அக்காலத்தே இப்பகுதி பெருங்கற்கால மக்களின் வாழ்விடமாக இருந்திருக்கக்கூடிய சாத்திய கூறுகளை உணர்த்தியது.. அந்த வறண்ட காட்டாற்றை கடந்து முன்னாள் மாணவன் அபிஷேக் வழி காட்டி முன் செல்ல அவனை பின் தொடர்ந்து இருவரும் அந்த அடர் வனத்தின் நடுவே நடக்கத்தொடங்கினோம் பாதையில் காட்டு விலங்குகளின் எச்சங்களை கண்டும் அது மேற்கு மலைத்தொடர்ச்சி புலிகள் காப்பகம் என்பதை மனதிற் கொண்டும் கவனமுடன் பயணபட்டோம்.

சிறிது தொலைவில் காட்டின் நடுவேயிருந்த கல் மண்டபத்தை கண்டோம்.. அது கற்றூண்கள் தாங்கிய மேல்விதானத்தையும் சுற்றிலும் சுவரின்றி திறந்தவெளி யாக காட்சி தந்தது மண்டபத்தின் உட்புறத்திலும் நான்கு சிறு தூண்கள் அமைத்து சிறிய கருவறை போன்று அமைத்திருந்தனர் தூண்களில் நின்ற நிலையில் கைகளை கூப்பி வணங்குவது போன்ற ஆண் பெண் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருந்தது அவர்கள் இம்மண்டபத்தை கட்டிய நாயக்கர் மற்றும் அவரதுஅரசியராக இருக்கலாம் மேலும் அமர்ந்த நிலையில் ஐய்யனார் சிற்பமும் பசு லிங்கத்தை தழுவி நாவினாற் வருடுவது போன்ற சிற்பங்களும் அம்மண்டபத்தின் படிக்கட்டுகளின் இரு புறமும் யாளி உருவங்களும் பாங்குற செதுக்கப்பட்டிருந்தது.. இம்மண்டபம் அக்காலத்தே வழிபாட்டு தளமாக இருந்திருக்கலாம் ..

அங்கிருந்து சிறிது தொலைவில் கவிகுடி அமைந்துள்ள அந்த சிறு குன்றையடைந்தோம் மேலே நடந்து செல்வதற்கு ஏதுவாக கற்பலகைகளை படிகட்டுகள் போன்று அமைத்திருந்தனர் கவிகுடி என்ற அக்கோயில் மேற் புறத்தே மிகப்பெரிய பிரமாண்டமான பாறையால் மூடப்பெற்ற குகை அக்காலத்தே பெருங்கற்கால மக்கள் வாழ்விடமாக திகழ்ந்திருக்க வேண்டும் மேலும் அங்கிருந்து பார்க்கும் போது நாங்கள் நடந்து வந்த பாதை அந்த காட்டாறு மற்றும் அப்பகுதி வனம் முமுமையும் பார்க்க முடிகிறது எனவே இந்த குகையில் இருந்தவாறே பெருங்கற்கால வேட்டையின மக்கள் வன விலங்குகள் தென்படுகின்றனவா என நோட்டம் பார்க்கும் முக்கிய கண்காணிப்பு பகுதியாக (vantage point) இருந்திருக்க வேண்டும் தற்காலத்தில் அந்த குகையை மண்சுவற்யெழுப்பி பல அறைகளாக பிரித்து வழிபாட்டு தளமாக மாற்றியுள்ளனர். ஒரு அறையில் நந்திபகவானும் மறு அறையில் சிவ இலிங்கத்தையும் அமைத்து கவி குடி( கெவி- குகை குடி- கோயில்) என வழிபட்டு வருகின்றனர் குகையின் உட்புறத்தில் பாறை கீரல்கள் (petroglyphs)போன்று காணப்பட்டாலும் தொடர் வண்ணமடித்தலால் தெளிவாக தெரியவில்லை மேலும் கவிகுடி அமைந்துள்ள குகையின் மேற்புறம் கை கூப்பிய நிலையில் அடியார் சிற்பம் சிதைந்த நிலையில் காட்சி தருகிறது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிவனடியார் இக்குகையில் தங்கி துறவு வாழ்வை மேற் கொண்டிருக்க வேண்டும். மேலும் கீழே நாம் கண்ட கல் மண்டபத்திலிருந்த நந்தி மற்றும் லிங்கத்தை பிற்காலத்தில் எடுத்து வந்து இங்கு வைத்து வழிபாடு செய்திருக்கலாம்.

மேலும் நமது ஆய்வின் போது பாறையின் மீது ஹளெ கன்னடமொழி கல்வெட்டும் கண்டறியப்பட்டது இவற்றின் எழுத்தமைதியைக் கொண்டு 1516 ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது என கருதலாம் மேற்கொண்டு அந்த குன்றை சுற்றிலும் சமண தடயங்கள் ஏதும் உள்ளனவா என தேடினோம் கண்டறிய இயலவில்லை.. அப்போதே அந்தி சாயும் நேரமாகியதால் கவி குடியிலிருந்து விடை பெற்றோம்...











கவிகுடி பெருங்கற்காலகுகையை நோக்கி....

 


 
 ஹளெகன்னட கல்வெட்டு..





மேலும்.. தொடரும்...

No comments:

Post a Comment