31 May 2020

வெண்கொற்றக்குடையும் தலைக்கோலியும்

கட்டுரை : திருமதி சக்தி பிரகாஷ்.
ஆய்வாளர், ஈரோடு
படம் வேலுதரண்
வெண்கொற்றக்குடை
மன்னர் ஆட்சி காலத்தில் அரசு சின்னங்களாக கொடி , குடை, முரசு , களிறு , தேர், செங்கோல், முடி ஆகியன இருந்தன. இவற்றில் குடை பற்றி காண்போம். சாதாரணமாக நாம் பயன்படுத்தும் குடை போல் அல்லாமல் மன்னர்களுக்கும், இறைவனுக்கும் பிடிப்பது "வெண்கொற்றக்குடை " ஆகும். கோயில்களில் விழாக் காலத்தில் உற்சவமூர்த்தியை வீதிஉலா அழைத்து செல்லும் போது குடை பிடிப்பது வழக்கம். அதேபோல் மன்னர்களுக்கும் இன்று நாம் கோயில்களில் காணும் குடை போன்ற குடை பயன்படுத்தபட்டு இருக்கிறது .

வெண் - வெள்ளை; கொற்றம் - வெற்றி; வெண்மையான பட்டினால் செய்யப்பட்ட குடை என்றும், இது வெற்றியின் அடையாளமாகவும் கருதப்பட்டது. போரில் எதிரி மன்னரின் குடையை சிதைப்பது அல்லது கைப்பற்றுவது வீரத்தின் அடையாளமாக கருதப்பட்டது. சிறப்பான இக்குடைகளை பிடிப்பதிலும் சில முறைகளை கடைபிடித்து உள்ளனர். அரசனுடைய குடை கோயில்களில் வலம் வரும் போது தாழ்த்தி பிடிக்கவேண்டும் என்றும், கடவுள் முதன்மையானவர் என்ற பொருளிலும் அதேசமயம் பேரரசன் மற்ற சிற்றரசர்களுடன் செல்லும் போது முன் வரிசையில் பேரரசனுடைய குடையை உயர்ந்தி பிடித்தவாரும் அவனுக்கு அடங்கிய சிற்றரசர் குடைகள் பின்னாலும் செல்ல வேண்டும் என்பது விதி .

இலக்கியகளிலும் குடையை பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் "வெண்கொற்றக் குடை" பற்றி இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். புகார்க் காண்டத்தில் ,மங்கள வாழ்த்து பாடலில் சோழ மன்னனுடைய குளிர்ச்சியான வெண்கொற்றக் குடையை போன்று திங்களும் அழகிய பரந்த இவ்வுலகை பாதுகாத்து வருவதாக குறிப்பிடுகிறார். மதுரை காண்டத்தில் கண்ணகி நீதி கேட்க்கும் காட்சியில் திங்களை ஒத்த வெண்கொற்றக்குடையினையும் வாள் வலிமையினையும் உடைய பாண்டியனின் சிறப்பு அழிந்து விட்டதே என்று குறிப்பிடுகிறார்.



90 year old zamindar of devakottai being taken for first honour in Kalayarkoil. PIC: #Venkatesh_Ramakrishnan

ஓவியங்களில் வரும் வெண் கொற்றக் குடை :
பனைமலையில் இராஜசிம்ம பல்லவனால் உருவாக்கப்பட்ட தாளபுரீஸ்வரர் கோயிலின் கருவறையில் உள்ள பார்வதி ஓவியத்தில் சிவப்பு நிற பட்டு துணியினாலான அலங்கரிக்கப்பட்ட குடை காட்டப்பட்டுள்ளது.  திருப்பருத்திக்குன்றம் வர்த்தமான மகாவீரர் கோயிலில் உள்ள ஓவியத்தில், ரிஷப தேவர் வரலாறு சொல்லும் காட்சியில் அவர் துறவறம் மேற்கொள்ள அரண்மனையை துறக்கும் காட்சியில் அவருக்கு வெண்கொற்றக்குடை பிடித்து ஊர்வலமாக அழைத்துச் செல்லும் காட்சி காட்டப் பட்டுள்ளது. காஞ்சி கைலாசநாதர் கோயில் தெய்வ உருவ சிற்பங்களில் உள்ள குடைகளில் முத்து மாலை மற்றும் பூமாலையால் அலங்கரிக்கப்பட்ட குடை காட்டப்பட்டுள்ளது. இவை மற்றுமல்லாமல் பல கோயில் சிற்பங்களிலும் குடை காட்டப்பட்டுள்ளது.

பனைமலை , வெண்கொற்றக்குடையுடன் காட்சி தரும் பார்வதி


ரிஷபநாதர் வெண்கொற்றக்குடையுடன் செல்லும் காட்சி , திருபருத்திக்குன்றம் 
படம் :வேலுதரண்

இரண்டாம் சரபோஜி - மராத்திய ஓவியம்

கல்வெட்டுகளிலும் நடுகற்களிலும் குடைகள் இடம் பெறுகிறது. பல இடங்களில் குடையுடன் கூடிய நடுகல்லை நாம் பார்க்கிறோம். அரசன் அல்லது தலைவனுக்கான நடுகல் என்பதை குடை கொண்டு நாம் அறிந்து கொள்ள முடிகிறது. விக்கிரம்சோழன் மற்றும் குலோதுங்க சோழன் கல்வெட்டுகளிலும் குடை பற்றிய குறிப்புள்ளது .சங்க கால சோழர்களின் செம்பு காசுகளில் யானை உருவம் பொறிக்கப்பட்டு அதற்கு மேல் வெண்கொற்றக் குடை காட்டப்பட்டிருகிறது.


 நடுகற்களில் காணப்படும் வெண்கொற்றக்குடை ( Kolar )

                                            நாணயத்தில் வெண்கொற்றக்குடை

புராணகால அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரத்தில் குடை காட்டப்பட்டுள்ளது. நாமக்கல்லில் உள்ள குடைவரையில் வாமன உருவத்திற்கு குடை காட்டப்பட்டுள்ளது.



தலைக்கோலி :
போரில் எதிரி மன்னரின் வெண்கொற்ற குடையை கைப்பற்றி அதில் உள்ள காம்பை கொண்டு தலைக்கோல் செய்தனர் என்றும், நடனத்தில் சிறந்த மங்கையருக்கு அந்த தலைக்கோலியை பரிசாக தந்ததாக கூறப்படுகிறது.

சிலப்பதிகாரதில் மாதவிக்கு "தலைக்கோலி" பட்டம் தரும் காட்சியில் வெண் கொற்ற குடையில் செய்யப்பட்ட தலைக்கோலி பற்றி விவரிக்கபட்டுள்ளது.


"கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை
வெயில்மறைக்  கொண்டன்றோ" (புற35)

இப்பாடலில் வானத்தில் ஓங்கி நிற்கும் கிள்ளி வளவனின் வெண்கொற்றக்குடை வெயிலை மறைக்க அன்று, குடிமக்களின் வருத்தத்தை போக்கி அருள் செய்வதற்கான அடையாளமாகும் என்று வெள்ளைக்குடி நாகனார் பாடுகிறார்.

வெண்கொற்றக்குடையால் செய்யப்படும் தலைக்கோலியுடன் ஆடல் மகளிர்

தொடரும்....

2 comments: