15 December 2021

வேழக்காடுகளில்சோழச்சுவடுகள் - தலக்காடு மணலில் புதையுண்ட சோழர்கால கோயில்கள், கர்நாடக மாநிலம் / Karnataka

கட்டுரை ஆசிரியர்
திரு ஜான் பீட்டர், வரலாற்று ஆய்வாளர், தொல்லியல்துறை முன்னாள் அதிகாரி, மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர், தாளவாடி 

 ( சென்ற பதிவின் தொடர்ச்சி...)
மேலை கங்கர் சாசனங்களும், கன்னட சாஹித்யங்களும் தலைக்காட்டை தலவனபுரா,கஜ ஆரண்ய க்ஷேத்ரா,தலைக்காடு, கரிவனா(வேழக்காடுகள்) என பல பெயர்களில் அழைத்தாலும் சோழர் கால கல்வெட்டுகள் முடிகொண்ட சோழ மண்டலத்து "தழைக்காடான இராஜராஜபுரம்" என குறிப்பிட்டு இன்ன வள நாட்டை சேர்ந்தது என சுட்டவில்லை! ஆயினும் சாம்ராஜ்நகர் மாவட்டம் பெட்ட ஹள்ளி( தமிழ் கல்வெட்டுகளில் வேடன் பள்ளி) என்னும் ஊரிலுள்ள இரண்டாம் வீரபல்லாளன் காலத்திய தமிழ் கல்வெட்டொன்று தலக்காடு "மும்முடி கொண்ட சோழ மண்டலத்து இராஜேந்திர சோழ வளநாட்டு வடகரை நாட்டு தழைக்காடான இராஜராஜபுரம் என்ற வளநாட்டு பிரிவைச் சொல்கிறது.

தலக்காடு கோயில்கள்-:
ஹள கன்னட மொழி கல்வெட்டுகள் இவ்வூரை "ஹொய்சாள தேசத்தின் தக்ஷிண வாரணாசி" என குறிப்பிடுப்படுவதால் அக்காலத்தில் தலக்காடு ஏராளமான கோயில்கள் நிறைந்த ஊராக திகழ்ந்திருக்கும் என்பதையறியலாம்.
தற்போது வைத்தீஸ்வரர் கோயில் மரலீஸ்வரர் கோயில், பாதாளீஸ்வரர் கோயில், சௌடேஸ்வரி ஆலயம்,கீர்த்தி நாரயணண் கோயில் வீர பத்ரர் கோயில், கோகணேஸ்வரர் கோயில், கௌரிசங்கரர் கோயில் போன்றவை பக்தர்கள் வழிபாட்டில் உள்ளன. இவற்றுள் பாதாளீஸ்வரர் மற்றும் மரலீஸ்வரர் கோயில்கள் 10-11ம் நூற்றாண்டை சேர்ந்த கங்க-சோழ கலைப்பாணியென கோயில் கட்டிட முறை, சிற்பங்களின் வேலைப்பாடு ஆகியவற்றை கொண்டு உறுதி செய்யலாம் மேலும் இக்கோயில்களில் சோழர் கால கல்வெட்டுகளும் ஆவணப்படுத்ப்பட்டுள்ளது. மேலும் வைத்தீஸ்வரர் கோயில் சோழர் காலத்தில் (முதலாம் குலோத்துங்கன்) கட்டப்பட்டு விஜயநகர, மைசூர் உடையார் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது கீர்த்தி நாராயணன் கோயில்() வரம் தரும் பெருமாள் 1117A.D.ஆண்டு சோழர் மீதான வெற்றியின் நினைவாக ஹொய்சாள மன்னன் விஷ்ணுவர்த்தனால் கட்டப்பட்டது ஏனையவை பிற்காலத்தியவை.

மண்ணுக்குள் புதையுண்ட சோழர் கால கோயில்கள்-:
மேற்காண் கோயில்களை தவிர தலக்காடு, தி.நரசிபுராவைச் சுற்றியுள்ள ஊர்களில் கிடைக்கும் கல்வெட்டு ஆவணங்கள் (எபி.கர்.மடலங்கள் 3,4,5) துணை கொண்டு ஆய்வு செய்தோமெனில் சோழர் காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படும் பல கோயில்கள்  தற்போது மணல் மேடுகளுக்குள் புதையுண்டிருக்கலாம் என்ற ஐயப்பாடு  எழுகின்றது. அவை:-

1. பெரிய நகரீஸ்வரமுடைய நாயனார் கோயில் ( சோழர் கால வணிகர்கள் எடுப்பித்தது)
2. வேலைக்காரேஸ்வரர் கோயில்
( அரச மெய்காப்பாளர் படை பிரிவினரால் கட்டப்பட்டிருக்கலாம்)
3.இராஜராஜேஸ்வரமுடையார் கோயில்.
இராஜராஜனின் காலத்தியது. இக்கோயிலில் திருவோணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது என்பதை கல்வெட்டு சான்றுகள் மூலம் அறிகிறோம்.)
4. அழகேஸ்வரமுடையார் கோயில்.
5. திரு பன்றீஸ்வரமுடையார் கோயில்.
6.சண்டிகேஸ்வரர் மற்றும் சண்டிகாம்பிகை கோயில்கள்.
7. தாண்டேஸ்வரர் கோயில்.
8.இராஜேந்திர சோழ விண்ணகரம்
9.இராஜேந்திர சோழ சதுர்வேதி மங்கலத்திலுள்ள வைகுந்த பெருமாள் கோவில் மற்றும் தில்லை நாதன் திருமண்டபம்.

சமணம் தழைத்தோங்கிய தலக்காட்டில் சைவ வைணவ கோயில்கள் மட்டுமல்லாமல் சோழர்கள் சமண பள்ளிகளையும் கட்டுவித்தனர்.
1.மஹா மேரு விடங்கன் பள்ளி
2.மால் வரி விடங்கன் பள்ளி
3. கஞ்சமங்கலம் உடையான் பள்ளி.

போன்றவையும் ஹொய்சாளர் காலத்தியதாக கருதப்படும் சைலஸ்வரர் கோயில், மல்லிகார்ஜூனசுவாமி, விக்னேஸ்வரா போன்ற கோவில்களும் மண்ணுக்குள் புதையுண்டிருக்கலாம்.

இங்ஙனம் ஏராளமான தொன்மை சின்னங்களும் புராதன கோயில்களும் மணலால் மூடப்பட்ட தலக்காட்டில் Directorate of Archeology and Museum in Karnataka மற்றும் Ancient History and Archaeology Dept.of University of mysore ம் இணைந்து பல்வேறு கட்டங்களாக அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நமது தற்போதைய தமிழக அரசும் தொல்லியல் துறையின் பால் அதீத நாட்டம் கொண்டு அகழாய்வுகள் பணிகளை முடுக்கி விட்டிருக்கும் இந்நிலையில் பழந்தமிழர் வணிகம் கலாச்சாரம் ஆட்சி நிர்வாகம் மேற்கொண்ட தமிழகம் தாண்டிய பகுதிகளான பாலூர்,வேங்கி, தலக்காடு  போன்ற இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை நடத்த போவதாக தெரிவித்துள்ளது.(பி.பி.ஸி.தமிழ் செப்.26. 21) புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் வரலாற்று துறை தமிழ்நாடு தொல்லியல் துறையுடன் இணைந்து செயலாற்றி வரும் பேராசிரியர் கே.இராஜன் இத்தகவலை வெளியிட்டுள்ளார் இது உள்ளமட்டிலும் வரவேற்க தாக்கதொன்றாகும். குறிப்பாக தலக்காடு மணல் மேடுகளுக்குள் பல நூறு ஆண்டுகளாக புதைந்து கிடக்கும் சோழர் தடயங்கள் வெளிச்சத்திற்கு வந்தால் பல அரிய வரலாற்று தரவுகள் கிடைக்க கூடும் என்பது திண்ணம்!







No comments:

Post a Comment