29 December 2021

A Rare Hero Stone / இருவேறு நூற்றாண்டின் அரிதான நடுகற்ககள் / at Horalavadi, Nanjangudu, Mysore District, Karnataka.

கட்டுரை ஆசிரியர்
திரு ஜான் பீட்டர்

மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவிலிருந்து 5கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஹொரளவாடி பஞ்சாயத்து கிராமம்.இவ்வூர் கல்வெட்டுகளில் அலபூர் என்றும் ஹொரளவாடி சீமை எனவும் குறிப்பிடப்படுகிறது. இங்கு கங்கமன்னன் ஸ்ரீபுருஷாவின் கல்வெட்டு மற்றும் கங்கர் காலத்தை சேர்ந்த நடுகற்கள் கிடைப்பதால் அக்காலத்தில் தொன்மை சிறப்பு வாய்ந்த ஊராக திகழ்ந்திருக்கும். மேலும் இங்கு ஹளகன்னடமொழியில் அமைந்த 8ம் நூற்றாண்டு தானக் கல்வெட்டில் 10ம்நூற்றாண்டை சேர்ந்த மூன்றடுக்கு தலைபலிகல்லும் ஒரே கல்லில் வடிக்கப்பட்டிருப்பதாக ஆவணத்தில் (எபி.கர். மடலம்- 3) மூலம் அறிந்து அவற்றை காண விழைந்தேன்!.


மைசூரிலிருந்து 50கி.மீ பயணப்பட்டு நஞ்சன்கூடிலிருந்து பிரசித்திபெற்ற சுத்தூர் மடத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ள ஹொரளவாடியை வந்தடைந்தேன் ஆவணத்தில் பொம்மப்பா கோயிலின் வடபுற திசையில் இந்நடுகல் உள்ளதாக அறிந்து அக்கோயிலை பற்றி விசாரிக்கையில் தற்போது அக்கோயில் இடிந்த நிலையில் வழிபாட்டில் இல்லை என்பதையறிந்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் ஊர் பெரியவர் ஒருவர் உதவ முன் வந்தார் அவரை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு வெளியே ஒற்றையடி பாதையில் பயணித்து அக்கோயில் இருக்குமிடத்தை அடைந்தோம் நான்கு பலகை கற்களால் ஆன சிறு வீடு போன்ற பொம்மப்பா கோயில் தற்போது விழுந்து கிடந்தது அதன் அருகே அந்த நடுகல்லை தேடத் தொடங்கினோம் அருகேயுள்ள பள்ளத்தில் மேற்புறம் சிதைந்த நிலையில் பார்க்க முடிந்தது ஏறக்குறைய முக்கோண வடிவத்தில் காட்சி தந்த அந்த மூன்றடுக்கு நடுகல்லின் முதல் நிலையில் (கீழிருந்து மேலாக) தலைபலிவீரன் ஆசனம் போன்ற பீடத்தில் பத்மாசனத்திலோ அமர்ந்து கரங்களை கூப்பியவாறு அமர்ந்திருந்தான் அருகே சிரசை கொய்வதற்காக அரிவாளை ஓங்கியவாறு ஒருவனும் காட்சி தருகின்றனர் இரண்டாம் நிலையில் உயிர் நீத்த தலைபலிவீரன் இரு தேவகன்னியர்களின் தோள்களை யணைத்தவாறு விண்ணுலகிற்கு பறந்து செல்லும் காட்சி மூன்றாம் நிலையில் இருமருங்கும் தேவகன்னியர் நின்ற நிலையில் நடுவே தலைபலிவீரன் (அ) இந்திரன் சுகாசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகின்றனர். நடுகல்லின் பின்புறத்தில் ஹளகன்னடமொழியில் அமைந்த எழுத்துக்கள் படிக்கவியலா வண்ணம் சிதைந்த நிலையில் காண முடிகிறது.

கல்வெட்டு செய்திகள் -; 
8ம்நூற்றாண்டு எழுத்தமைவில் பொறிக்கப்பட்டிருந்த ஹளகன்னடமொழி கல்வெட்டு கூறும் செய்தியாவது-: கெசில்மனே என்ற ஊரின் தலைவர்கள் ஒன்று கூடி ஏரிக்கரைக்கருகே உள்ள நஞ்சை நிலத்தை கொடையாக அமித்தபட்டதி மகன் சோமதி என்பவனுக்கு தானமாக வழங்கியதை கூறுவதால் இது நடுகல் கல்வெட்டாகயிருக்கலாம்.

அதே கல்வெட்டின் கீழே 10 நூற்றாண்டு எழுத்தமைதியில் அமைந்த கல்வெட்டு கூறும் செய்தி-: தலைபலிவீரனான எரேவின் மகன் பெனயிதா கார்கேவிற்கு பத்து கந்துகா நிலத்தை பல்லிகாலே சந்தையா என்பவன் தானமாக வழங்கியதை கூறும் இக்கல்வட்டு எக்காரணம் பொருட்டு தலை பலி கொடுத்தான் என்பதை குறிப்பிடவில்லை!

இந்த நடுகல் குறித்து தம்பி Kumaravel Ramasamy யிடம் பேசுகையில் இதே போன்று இரு வெவ்வேறு காலக்கட்டத்தை சேர்ந்த வரலாற்று செய்தியை தாங்கிய நடுகல் நம் தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ளது எனக் கூறி அந்நடுகல் பற்றிய குறிப்புகள் மற்றும் புகைப்படத்தையும் அனுப்பி வைத்தார். தர்மபுரி மாவட்டம் இண்டூர் என்னும் ஊரில் 8-9 நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து நடுகல் கல்வெட்டில் கங்க அரசன் ஸ்ரீபுருஷாவின் கீழ் இப்பகுதியை ஆட்சி செய்த மாவலி வாணராயர் பூசலின் போது நான்கு வீரர்களுடன் போரிட்டு வீர மரணமெய்தியதன் நினைவாக நடுகல் எழுப்பபட்டதென கூறுகிறது. இதே நடுகல்லின் வீரனின் சிற்பத்தை செதுக்கி யெடுக்கப்பட்டு 11நூற்றாண்டை சேர்ந்த இராஜாதிராஜனின் 31 வது ஆட்சியாண்டு கல்வெட்டு மெய்கீர்த்தியுடன் பொறிக்கப்பட்டுள்ளது


கங்க நாட்டு தகடூர் நாட்டு பனைகுளத்து சிறுமுக்கூடல் முனிவர் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது தொறுமீட்டு என்ற சொல் வந்துள்ளதால் இது நடுகல் கல்வெட்டு எனக் கொள்ளலாம். மேலும் இந்த இரண்டு நடுகற்களின் நான்கு வரலாற்று செய்திகளுக்கும் ஒரு பொதுவான ஒற்றுமையை காண முடிகிறது இவை கங்கர் காலத்திலும் அ கங்கர் ஆட்சிபரப்பிற்குட்பட்ட பகுதிகளில் நடந்த நிகழ்வுகளாகும்.

பொதுவாக கங்க மண்டலம் எனப்படும் தென்கர்நாடக பகுதிகளில் ஊரின் ஒரு புறத்தை தேர்ந்தெடுத்து ஈமக்காடு போல் பாவித்து போரிலோ அல்லது ஊரைக் காப்பாற்றும் வீரச்செயல்களின் போது வீழ்ந்து பட்ட வீரர்களுக்கு நடுகல் எடுப்பித்தனர் அந்த பகுதியையே புனிதமாக கருதினர். சாம்ராஜ்நகர், மைசூர், தாளவாடியிலுள்ள பல கிராமத்திலும் தொன்மைகால ஈமச்சின்னங்கள்,நடுகற்கள் சதிகற்கள் செக்கு கல் ஆகியவை ஒரேயிடத்தில் அருகருகே கிடைப்பதை காண்கிறோம்.

மேலும் தொல்காப்பியத்தில் காண்கிறபடி காட்சி கால்கோள் நீர்படை நடுதல் என்ற படிநிலைகளில் நடுகல் செய்வதற்குரிய தேடி சென்று, மலையினின்று கல்லை வெட்டியெடுத்து நீராட்டி, தூய்மைபடுத்தி நட்டு சிறப்புகளை படைத்து வாழ்த்தி அதை தெய்வீக தன்மை கொண்ட கல்லாக புனிதமூட்டினர் என அறிகிறோம் எனவே புதிதாக ஒரு கல்லை தெரிவு செய்து இத்துணை சடங்குகளை நிகழ்த்துவதற்கு மாற்றாக ஏற்கெனவே அமைக்கப்பட்ட நடுகல்லின் மறுபுறத்தில் பிறிதொரு வீரனுக்கும் நடுகல் வடித்து வழிபட்டதால் இத்தகு அரிய நடுகற்கள் நமக்கு கிடைக்கின்றன எனக் கொள்ளலாம்!






பயணங்கள் தொடரும் 

No comments:

Post a Comment