கட்டுரை ஆசிரியர்
திரு ஜான் பீட்டர்
திரு ஜான் பீட்டர்
கல்யாணி
சாளுக்கியர்கள், சேவுனர்கள், மேலை கங்கர் ஆட்சியின் கீழ் அதுவரை சிற்றரசர்களாகவிருந்த
ஹொய்சாளர் மரபில் வராது வந்த மாமணியான பிட்டிதேவா எ விஷ்ணுவர்த்தனன் தனது
பெருமுயற்சியால் போர் நடவடிக்கைகளால் கர்நாடகம் முழுவதையும் வென்று துவார சமுத்திரத்தை
தலைநகராக கொண்டு தென்னிந்தியாவின் வல்லரசாக ஹொய்சாள இராஜ்ஜியத்தை நிர்மாணித்தான். தனது
தலைநகரான துவார சமுத்திரத்தில் சைவ,வைணவ,சமண கோயில்கள் பலவற்றை எழுப்பினான்.
சோழர் மீதான வெற்றியின்
நினைவாக பொ.யு. 1117ல் விஜய நாரயணா கோயில் கட்டப்பட்டது. சிவனுக்காக
ஹொய்சாளேஸ்வரர் மற்றும் சாந்தாலேஸ்வரர் என்ற இரட்டை கோயில்கள் விஷ்ணுவர்தனின்
முக்கிய தளபதியான கேட்டமல்லாவினால் பொயு1121ல் தொடங்கபட்டு 1160 ஆண்டு
கட்டிமுடிக்கப்பட்டது. இங்குள்ள ஹொய்சாளர் கட்டிடங்களில் மிகப் பெரிது என இதனை
கூறுவர். எழிலாரந்த சிற்பங்கள் 240க்கும் மேலாக வடிக்கப்பட்ட
இக்கோயிலைப் போன்று சிற்பங்களால் புடை சூழப்பட்ட கோயில் வேறொன்று இல்லை என
அறுதியிட்டு கூறலாம். ஆங்கில கலை,வரலாற்றியல் வல்லுநர் பெர்சி ப்ரௌனின்
கூற்றுப்படி இக்கோயில் " The
Supreme climax of Indian Architecture" என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
ஏறக்குறைய
300ஆண்டுகளுக்கும் மேலாக ஹொய்சாளர் தலைநகராக திகழ்ந்த ஹளபேடு எ துவாரசமுத்திரம்
14ம் நூற்றாண்டில் முகமதியர் படையெடுப்பினால் இருமுறை பலத்த
தாக்குதலுக்குள்ளானது.பொ.யு 1326ல்அலாவுதீன் கில்ஜியினாலும் மறுமுறை டில்லி
சுல்தான் முகமது பின் துக்ளக்கினால் நிகழ்த்தப்பட்ட பேரழிவினால் ஹொய்சாளேஸ்வரர்
கோயிலும் சேதத்திற்குள்ளானது. பின்னர் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஆட்சி
நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டபோது (1801-06) கர்நாடக கோயில்களில் முறையான ஆய்வு
முதன்முதலில் நடைபெற்றது இக்கோயிலில்தான்! அதுமட்டுமின்றி கோயில் புகைப்படங்களில்
புராதானமானதும் இப்புகைப்படமே!
பின்னர்
19ம்நூற்றாண்டில் மைசூர் ஸ்டேட் தொல்பொருள்ஆய்வு துறை இயக்குனராக 20 ஆண்டு காலமாக
பணியாற்றிய B.L.ரைஸ் தமது 1903ம் ஆண்டு ஆய்வின் போது பேளூர் சென்னகேசவா கோயிலில்
தாம் கண்ட நடன மங்கையர்
சிற்பங்கள் இங்கு ஹொய்சாளேஸ்வரா கோயிலில் அடியோடு பெயர்த் தெடுக்கப்பட்டிருப்பதும்
வெனிப்புறதூணின் மேற்புறம் அடைப்பு சிற்பங்களின்றி( Bracket figures) காலியாக
இருப்பதை குறித்து சம்பந்த பட்ட கோயில் துறை (Muzarai Department) அலுவலர்களிடம்
விசாரணை மேற்கொண்டதும் களவு போன விதம் அச்சிலைகள் எங்கு எவ்வாறு எடுத்து
செல்லப்பட்டது என்பதையும் தமது ஆய்வறிக்கையில் குறித்துள்ளார் அதற்கு முன்னர் "ஹொய்சாளர்
சிற்பங்களின் அற்புதமான நடன மங்கையர் மதனிகை" குறித்து இங்கு
காண்போம்!
மதனிகை-:
கோயில்களில் பெண்
கடவுளர்களின் பணிப்பெண்ணாக வடிக்கப்படும் தேவதை போன்ற அழகிய கன்னிகையர் சிற்பங்கள்
மதனிகை, சாலபஞ்சிகா,சிலாபாலிகா,புத்தலி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. சாலா
என்ற மரத்தினை பற்றியபடி மாயாதேவி சித்தார்த்தனை ஈன்றதாக புத்த ஜாதக கதைகள்
உரைக்கின்றன.சாலபஞ்சிகா மரத்தோடு தொடர்புடைய வளமைத் தெய்வம் என்கின்றனர்.
கர்நாடகத்தில் கோயில் சிற்பங்களில் மதனிகை சிற்பங்களை வடிக்கும் மரபினை
அறிமுகப்படுத்தியவர்கள் மேலை சாளுக்கியர்கள்தான்! பின்னர் விஷ்ணுவர்தனன்
அச்சிற்பிகளை துவாரசமுத்திரம் வரவழைத்து அவர்களின் மேற்பார்வையில் ஹொய்சாளர்
சிற்பிகளுடன் இணைந்து பேளூர் விஜயநாராயணர்
கோயிலை கட்டினர். சாளுக்கியர் கோயில்களில் வெளிப்புற தூணின் மேற்புறம்
வடிக்கப்பட்ட சிலாபாலிகா சிற்பங்கள் ஹொய்சாளார் கோயில்களில் தனிச் சிற்பமாக
வடித்து வெளிப்புற சுவற்றின் மேலடுக்கில் போதியம்-விதானத்திற்குமிடையே 45 கோணம்
சாய்வாக பொருத்தப்பட்டு அடைப்பு சிற்பங்கள் (Bracket figures) என அழைக்கப்பட்டது
இந்த சாய்தள அமைப்பு இச்சிற்பங்களை கள்வர்கள் சுலபமாக பெயர்த்தெடுக்க ஏதுவாயிற்று!
கல்லில் வடித்த கவிதை-:
சாளுக்கியர்
கலைப்பாணியின்றும் ஹொய்சாளர் சிற்பிகள் கைவண்ணத்தில் கற்பனைதிறன் கொணடு மெருகூட்டி
சிலாபாலிகா சிலைகளை சிற்பக் கலையின் உச்சம் தொட வைத்தனர். விஷ்ணு வர்தனின்
பட்டமஹாதேவியான சாந்தலாதேவி பேரழகினள்.இயல் இசை நாட்டியம் என அனைத்து கலைகளிலும் வித்தகியாக
திகழ்ந்தனள். குறிப்பாக பரத நாட்டியத்தில் தலைசிறந்த ஆடழலகி நடனத்தில் அவள் காட்டிய
நவரச பாவனைகளின் பிரதிபலிப்பே சிலாபாலிகா சிற்பங்களாக மிளிர்ந்தனயெனவும் அவளின்
ஆடற்கலையால் ஆதர்சிக்கப்பட்ட சிற்பிகள் நடன அசைவுகளை உள்வாங்கி ஆத்ம உணர்ச்சியோடு
வடித்ததால்தான் காலத்தால் கரையாத கலைப் பொக்கிஷங்களாக சிலைகள் முகிழந்தது
என்கின்றனர் கர்நாடக கலைவல்லுநர்கள்.
இது எவ்வாறு
இருப்பினும் நுண்ணிய வேலைப்பாடுகளாலும், முக வசீககரத்தாலும் நேர்த்தியான
சிற்பமைவிலும் ஹொய்சாள சிற்பிகள் "மாக்கல்லால் வடித்த
மகத்தான கவிதை" இந்த மதனிகை சிற்பங்கள். எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர்
சிற்பிகளின் உளி கொண்ட விரல்களால் விளைந்த இந்த விந்தை கலைச்சின்னங்களில் பல இன்று
அயல்நாட்டு அருங்காட்சியகங்களை அலங்கரித்து நிற்கின்றன! அங்ஙனம் இந்த
ஹொய்சாளேஸ்வரர் சாலபஞ்சிகா சிற்பங்களும் 18ம்நூற்றாண்டு வாக்கில் பிரெஞ்சு
தேசத்திற்கு பயணப்பட்டதை B.L.ரைஸ் தனது விசாரணையில் புலப்படுத்தியுள்ளார்.
18நூ.இறுதியில் பிரித்தானிய
கிழக்கிந்தியக் கம்பெனிக்கும்- மைசூர் இராச்சியத்தின் ஹைதர் அலிக்கும்
தென்னிந்தியாவில் ஆதிக்க சக்தியாக திகழ்வது குறித்து போர்கள் நடைபெற்றுவந்தது
இதில் ஆங்கிலேயரின் எதிர் சக்தியாக விளங்கிய பிரெஞ்சு தேசப்படைகள் ஹைதருடன்
நட்புறவு பூண்டு போர் உடன் படிக்கை செய்து கொண்டன.அப்போது இந்தியாவில் பிரெஞ்சு
தளபதியாக பணியாற்றிவர் கவுன்ட்- டி-லால்லி இவர் வந்தவாசியில் நடைபெற்ற
போரில் ஆங்கில படை தளபதி சர்அயர்கூட்டிடம் தோல்வியுற்று பாண்டிச்சேரியில்
சிறைபிடிக்கப்பட்டார் பின்னர் பிரான்ஸ் தேசத்திற்க்கு திரும்பி செல்கையில்
ஹொய்சாளேஸ்வரர் மதனிகை சிற்பங்களை எடுத்து சென்றதாகவும் இதற்கு ஹைதரின்
படைகளில் பணிபுரிந்த பிரெஞ்சு அதிகாரிகளான அலைன் ஹூகல்,பிஸி, போன்றோர்
உதவினரென்றும் இச்சிற்பங்களுக்கு நஷ்டஈடாகவும் கோயில் பராமரிப்பிற்காகவும்
பிரான்ஸிலிருந்து அனுப்பட்ட ப்ராங் இங்கு
வராகன் மற்றும் பகோடாக்களாக மாற்றப்பட்டு கோயிலுக்கு வழங்கியதை உறுதி
படுத்தியுள்ளார் அப்போது இந்த சிலாபாலிகா சிற்பங்கள் பிரான்ஸ் நாட்டில் வடகிழக்கு
பகுதியில் Aisne ஆற்றங்கரையில் அமைந்துள்ள பழம்பெரும் நகரமான Soissons உள்ளது என
1903 ஆண்டு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்
தற்போது அச்சிலைகள்
எங்குள்ளது என்பது அந்த ஹொய்சாளேஸ்வரருக்குத்தான் வெளிச்சம்!
புகைப்படங்கள்:
இணையசுடுகை
No comments:
Post a Comment