16 January 2022

ஹொய்சாளேஸ்வரா சிலாபாலிகா சிற்பங்கள், மனதைமயக்கும்மதனிகை, கல்லில்வடித்தகவிதைகளவுபோனதுஎப்படி?

கட்டுரை ஆசிரியர்
திரு ஜான் பீட்டர்

கல்யாணி சாளுக்கியர்கள், சேவுனர்கள், மேலை கங்கர் ஆட்சியின் கீழ் அதுவரை சிற்றரசர்களாகவிருந்த ஹொய்சாளர் மரபில் வராது வந்த மாமணியான பிட்டிதேவா எ விஷ்ணுவர்த்தனன் தனது பெருமுயற்சியால் போர் நடவடிக்கைகளால் கர்நாடகம் முழுவதையும் வென்று துவார சமுத்திரத்தை தலைநகராக கொண்டு தென்னிந்தியாவின் வல்லரசாக ஹொய்சாள இராஜ்ஜியத்தை நிர்மாணித்தான். தனது தலைநகரான துவார சமுத்திரத்தில் சைவ,வைணவ,சமண கோயில்கள் பலவற்றை எழுப்பினான்.



சோழர் மீதான வெற்றியின் நினைவாக பொ.யு. 1117ல் விஜய நாரயணா கோயில் கட்டப்பட்டது. சிவனுக்காக ஹொய்சாளேஸ்வரர் மற்றும் சாந்தாலேஸ்வரர் என்ற இரட்டை கோயில்கள் விஷ்ணுவர்தனின் முக்கிய தளபதியான கேட்டமல்லாவினால் பொயு1121ல் தொடங்கபட்டு 1160 ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இங்குள்ள ஹொய்சாளர் கட்டிடங்களில் மிகப் பெரிது என இதனை கூறுவர். எழிலாரந்த சிற்பங்கள் 240க்கும் மேலாக வடிக்கப்பட்ட இக்கோயிலைப் போன்று சிற்பங்களால் புடை சூழப்பட்ட கோயில் வேறொன்று இல்லை என அறுதியிட்டு கூறலாம். ஆங்கில கலை,வரலாற்றியல் வல்லுநர் பெர்சி ப்ரௌனின் கூற்றுப்படி இக்கோயில் " The Supreme climax of Indian Architecture" என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!


ஏறக்குறைய 300ஆண்டுகளுக்கும் மேலாக ஹொய்சாளர் தலைநகராக திகழ்ந்த ஹளபேடு எ துவாரசமுத்திரம் 14ம் நூற்றாண்டில் முகமதியர் படையெடுப்பினால் இருமுறை பலத்த தாக்குதலுக்குள்ளானது.பொ.யு 1326ல்அலாவுதீன் கில்ஜியினாலும் மறுமுறை டில்லி சுல்தான் முகமது பின் துக்ளக்கினால் நிகழ்த்தப்பட்ட பேரழிவினால் ஹொய்சாளேஸ்வரர் கோயிலும் சேதத்திற்குள்ளானது. பின்னர் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஆட்சி நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டபோது (1801-06) கர்நாடக கோயில்களில் முறையான ஆய்வு முதன்முதலில் நடைபெற்றது இக்கோயிலில்தான்! அதுமட்டுமின்றி கோயில் புகைப்படங்களில் புராதானமானதும் இப்புகைப்படமே!

பின்னர் 19ம்நூற்றாண்டில் மைசூர் ஸ்டேட் தொல்பொருள்ஆய்வு துறை இயக்குனராக 20 ஆண்டு காலமாக பணியாற்றிய B.L.ரைஸ் தமது 1903ம் ஆண்டு ஆய்வின் போது பேளூர் சென்னகேசவா கோயிலில் தாம் கண்ட நடன மங்கையர் சிற்பங்கள் இங்கு ஹொய்சாளேஸ்வரா கோயிலில் அடியோடு பெயர்த் தெடுக்கப்பட்டிருப்பதும் வெனிப்புறதூணின் மேற்புறம் அடைப்பு சிற்பங்களின்றி( Bracket figures) காலியாக இருப்பதை குறித்து சம்பந்த பட்ட கோயில் துறை (Muzarai Department) அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டதும் களவு போன விதம் அச்சிலைகள் எங்கு எவ்வாறு எடுத்து செல்லப்பட்டது என்பதையும் தமது ஆய்வறிக்கையில் குறித்துள்ளார் அதற்கு முன்னர் "ஹொய்சாளர் சிற்பங்களின் அற்புதமான நடன மங்கையர் மதனிகை" குறித்து இங்கு காண்போம்!

மதனிகை-:
கோயில்களில் பெண் கடவுளர்களின் பணிப்பெண்ணாக வடிக்கப்படும் தேவதை போன்ற அழகிய கன்னிகையர் சிற்பங்கள் மதனிகை, சாலபஞ்சிகா,சிலாபாலிகா,புத்தலி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. சாலா என்ற மரத்தினை பற்றியபடி மாயாதேவி சித்தார்த்தனை ஈன்றதாக புத்த ஜாதக கதைகள் உரைக்கின்றன.சாலபஞ்சிகா மரத்தோடு தொடர்புடைய வளமைத் தெய்வம் என்கின்றனர். கர்நாடகத்தில் கோயில் சிற்பங்களில் மதனிகை சிற்பங்களை வடிக்கும் மரபினை அறிமுகப்படுத்தியவர்கள் மேலை சாளுக்கியர்கள்தான்! பின்னர் விஷ்ணுவர்தனன் அச்சிற்பிகளை துவாரசமுத்திரம் வரவழைத்து அவர்களின் மேற்பார்வையில் ஹொய்சாளர் சிற்பிகளுடன் இணைந்து பேளூர் விஜயநாராயணர் கோயிலை கட்டினர். சாளுக்கியர் கோயில்களில் வெளிப்புற தூணின் மேற்புறம் வடிக்கப்பட்ட சிலாபாலிகா சிற்பங்கள் ஹொய்சாளார் கோயில்களில் தனிச் சிற்பமாக வடித்து வெளிப்புற சுவற்றின் மேலடுக்கில் போதியம்-விதானத்திற்குமிடையே 45 கோணம் சாய்வாக பொருத்தப்பட்டு அடைப்பு சிற்பங்கள் (Bracket figures) என அழைக்கப்பட்டது இந்த சாய்தள அமைப்பு இச்சிற்பங்களை கள்வர்கள் சுலபமாக பெயர்த்தெடுக்க ஏதுவாயிற்று!










கல்லில் வடித்த கவிதை-:
சாளுக்கியர் கலைப்பாணியின்றும் ஹொய்சாளர் சிற்பிகள் கைவண்ணத்தில் கற்பனைதிறன் கொணடு மெருகூட்டி சிலாபாலிகா சிலைகளை சிற்பக் கலையின் உச்சம் தொட வைத்தனர். விஷ்ணு வர்தனின் பட்டமஹாதேவியான சாந்தலாதேவி பேரழகினள்.இயல் இசை நாட்டியம் என அனைத்து கலைகளிலும் வித்தகியாக திகழ்ந்தனள். குறிப்பாக பரத நாட்டியத்தில் தலைசிறந்த ஆடழலகி நடனத்தில் அவள் காட்டிய நவரச பாவனைகளின் பிரதிபலிப்பே சிலாபாலிகா சிற்பங்களாக மிளிர்ந்தனயெனவும் அவளின் ஆடற்கலையால் ஆதர்சிக்கப்பட்ட சிற்பிகள் நடன அசைவுகளை உள்வாங்கி ஆத்ம உணர்ச்சியோடு வடித்ததால்தான் காலத்தால் கரையாத கலைப் பொக்கிஷங்களாக சிலைகள் முகிழந்தது என்கின்றனர் கர்நாடக கலைவல்லுநர்கள்.

இது எவ்வாறு இருப்பினும் நுண்ணிய வேலைப்பாடுகளாலும், முக வசீககரத்தாலும் நேர்த்தியான சிற்பமைவிலும் ஹொய்சாள சிற்பிகள் "மாக்கல்லால் வடித்த மகத்தான கவிதை" இந்த மதனிகை சிற்பங்கள். எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் சிற்பிகளின் உளி கொண்ட விரல்களால் விளைந்த இந்த விந்தை கலைச்சின்னங்களில் பல இன்று அயல்நாட்டு அருங்காட்சியகங்களை அலங்கரித்து நிற்கின்றன! அங்ஙனம் இந்த ஹொய்சாளேஸ்வரர் சாலபஞ்சிகா சிற்பங்களும் 18ம்நூற்றாண்டு வாக்கில் பிரெஞ்சு தேசத்திற்கு பயணப்பட்டதை B.L.ரைஸ் தனது விசாரணையில் புலப்படுத்தியுள்ளார். 18நூ.இறுதியில் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனிக்கும்- மைசூர் இராச்சியத்தின் ஹைதர் அலிக்கும் தென்னிந்தியாவில் ஆதிக்க சக்தியாக திகழ்வது குறித்து போர்கள் நடைபெற்றுவந்தது இதில் ஆங்கிலேயரின் எதிர் சக்தியாக விளங்கிய பிரெஞ்சு தேசப்படைகள் ஹைதருடன் நட்புறவு பூண்டு போர் உடன் படிக்கை செய்து கொண்டன.அப்போது இந்தியாவில் பிரெஞ்சு தளபதியாக பணியாற்றிவர் கவுன்ட்- டி-லால்லி இவர் வந்தவாசியில் நடைபெற்ற போரில் ஆங்கில படை தளபதி சர்அயர்கூட்டிடம் தோல்வியுற்று பாண்டிச்சேரியில் சிறைபிடிக்கப்பட்டார் பின்னர் பிரான்ஸ் தேசத்திற்க்கு திரும்பி செல்கையில் ஹொய்சாளேஸ்வரர் மதனிகை சிற்பங்களை எடுத்து சென்றதாகவும் இதற்கு ஹைதரின் படைகளில் பணிபுரிந்த பிரெஞ்சு அதிகாரிகளான அலைன் ஹூகல்,பிஸி, போன்றோர் உதவினரென்றும் இச்சிற்பங்களுக்கு நஷ்டஈடாகவும் கோயில் பராமரிப்பிற்காகவும் பிரான்ஸிலிருந்து அனுப்பட்ட ப்ராங் இங்கு வராகன் மற்றும் பகோடாக்களாக மாற்றப்பட்டு கோயிலுக்கு வழங்கியதை உறுதி படுத்தியுள்ளார் அப்போது இந்த சிலாபாலிகா சிற்பங்கள் பிரான்ஸ் நாட்டில் வடகிழக்கு பகுதியில் Aisne ஆற்றங்கரையில் அமைந்துள்ள பழம்பெரும் நகரமான Soissons உள்ளது என 1903 ஆண்டு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்


தற்போது அச்சிலைகள் எங்குள்ளது என்பது அந்த ஹொய்சாளேஸ்வரருக்குத்தான் வெளிச்சம்!
புகைப்படங்கள்: இணையசுடுகை

29 December 2021

A Rare Hero Stone / இருவேறு நூற்றாண்டின் அரிதான நடுகற்ககள் / at Horalavadi, Nanjangudu, Mysore District, Karnataka.

கட்டுரை ஆசிரியர்
திரு ஜான் பீட்டர்

மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவிலிருந்து 5கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஹொரளவாடி பஞ்சாயத்து கிராமம்.இவ்வூர் கல்வெட்டுகளில் அலபூர் என்றும் ஹொரளவாடி சீமை எனவும் குறிப்பிடப்படுகிறது. இங்கு கங்கமன்னன் ஸ்ரீபுருஷாவின் கல்வெட்டு மற்றும் கங்கர் காலத்தை சேர்ந்த நடுகற்கள் கிடைப்பதால் அக்காலத்தில் தொன்மை சிறப்பு வாய்ந்த ஊராக திகழ்ந்திருக்கும். மேலும் இங்கு ஹளகன்னடமொழியில் அமைந்த 8ம் நூற்றாண்டு தானக் கல்வெட்டில் 10ம்நூற்றாண்டை சேர்ந்த மூன்றடுக்கு தலைபலிகல்லும் ஒரே கல்லில் வடிக்கப்பட்டிருப்பதாக ஆவணத்தில் (எபி.கர். மடலம்- 3) மூலம் அறிந்து அவற்றை காண விழைந்தேன்!.


மைசூரிலிருந்து 50கி.மீ பயணப்பட்டு நஞ்சன்கூடிலிருந்து பிரசித்திபெற்ற சுத்தூர் மடத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ள ஹொரளவாடியை வந்தடைந்தேன் ஆவணத்தில் பொம்மப்பா கோயிலின் வடபுற திசையில் இந்நடுகல் உள்ளதாக அறிந்து அக்கோயிலை பற்றி விசாரிக்கையில் தற்போது அக்கோயில் இடிந்த நிலையில் வழிபாட்டில் இல்லை என்பதையறிந்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் ஊர் பெரியவர் ஒருவர் உதவ முன் வந்தார் அவரை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு வெளியே ஒற்றையடி பாதையில் பயணித்து அக்கோயில் இருக்குமிடத்தை அடைந்தோம் நான்கு பலகை கற்களால் ஆன சிறு வீடு போன்ற பொம்மப்பா கோயில் தற்போது விழுந்து கிடந்தது அதன் அருகே அந்த நடுகல்லை தேடத் தொடங்கினோம் அருகேயுள்ள பள்ளத்தில் மேற்புறம் சிதைந்த நிலையில் பார்க்க முடிந்தது ஏறக்குறைய முக்கோண வடிவத்தில் காட்சி தந்த அந்த மூன்றடுக்கு நடுகல்லின் முதல் நிலையில் (கீழிருந்து மேலாக) தலைபலிவீரன் ஆசனம் போன்ற பீடத்தில் பத்மாசனத்திலோ அமர்ந்து கரங்களை கூப்பியவாறு அமர்ந்திருந்தான் அருகே சிரசை கொய்வதற்காக அரிவாளை ஓங்கியவாறு ஒருவனும் காட்சி தருகின்றனர் இரண்டாம் நிலையில் உயிர் நீத்த தலைபலிவீரன் இரு தேவகன்னியர்களின் தோள்களை யணைத்தவாறு விண்ணுலகிற்கு பறந்து செல்லும் காட்சி மூன்றாம் நிலையில் இருமருங்கும் தேவகன்னியர் நின்ற நிலையில் நடுவே தலைபலிவீரன் (அ) இந்திரன் சுகாசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகின்றனர். நடுகல்லின் பின்புறத்தில் ஹளகன்னடமொழியில் அமைந்த எழுத்துக்கள் படிக்கவியலா வண்ணம் சிதைந்த நிலையில் காண முடிகிறது.

கல்வெட்டு செய்திகள் -; 
8ம்நூற்றாண்டு எழுத்தமைவில் பொறிக்கப்பட்டிருந்த ஹளகன்னடமொழி கல்வெட்டு கூறும் செய்தியாவது-: கெசில்மனே என்ற ஊரின் தலைவர்கள் ஒன்று கூடி ஏரிக்கரைக்கருகே உள்ள நஞ்சை நிலத்தை கொடையாக அமித்தபட்டதி மகன் சோமதி என்பவனுக்கு தானமாக வழங்கியதை கூறுவதால் இது நடுகல் கல்வெட்டாகயிருக்கலாம்.

அதே கல்வெட்டின் கீழே 10 நூற்றாண்டு எழுத்தமைதியில் அமைந்த கல்வெட்டு கூறும் செய்தி-: தலைபலிவீரனான எரேவின் மகன் பெனயிதா கார்கேவிற்கு பத்து கந்துகா நிலத்தை பல்லிகாலே சந்தையா என்பவன் தானமாக வழங்கியதை கூறும் இக்கல்வட்டு எக்காரணம் பொருட்டு தலை பலி கொடுத்தான் என்பதை குறிப்பிடவில்லை!

இந்த நடுகல் குறித்து தம்பி Kumaravel Ramasamy யிடம் பேசுகையில் இதே போன்று இரு வெவ்வேறு காலக்கட்டத்தை சேர்ந்த வரலாற்று செய்தியை தாங்கிய நடுகல் நம் தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ளது எனக் கூறி அந்நடுகல் பற்றிய குறிப்புகள் மற்றும் புகைப்படத்தையும் அனுப்பி வைத்தார். தர்மபுரி மாவட்டம் இண்டூர் என்னும் ஊரில் 8-9 நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து நடுகல் கல்வெட்டில் கங்க அரசன் ஸ்ரீபுருஷாவின் கீழ் இப்பகுதியை ஆட்சி செய்த மாவலி வாணராயர் பூசலின் போது நான்கு வீரர்களுடன் போரிட்டு வீர மரணமெய்தியதன் நினைவாக நடுகல் எழுப்பபட்டதென கூறுகிறது. இதே நடுகல்லின் வீரனின் சிற்பத்தை செதுக்கி யெடுக்கப்பட்டு 11நூற்றாண்டை சேர்ந்த இராஜாதிராஜனின் 31 வது ஆட்சியாண்டு கல்வெட்டு மெய்கீர்த்தியுடன் பொறிக்கப்பட்டுள்ளது


கங்க நாட்டு தகடூர் நாட்டு பனைகுளத்து சிறுமுக்கூடல் முனிவர் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது தொறுமீட்டு என்ற சொல் வந்துள்ளதால் இது நடுகல் கல்வெட்டு எனக் கொள்ளலாம். மேலும் இந்த இரண்டு நடுகற்களின் நான்கு வரலாற்று செய்திகளுக்கும் ஒரு பொதுவான ஒற்றுமையை காண முடிகிறது இவை கங்கர் காலத்திலும் அ கங்கர் ஆட்சிபரப்பிற்குட்பட்ட பகுதிகளில் நடந்த நிகழ்வுகளாகும்.

பொதுவாக கங்க மண்டலம் எனப்படும் தென்கர்நாடக பகுதிகளில் ஊரின் ஒரு புறத்தை தேர்ந்தெடுத்து ஈமக்காடு போல் பாவித்து போரிலோ அல்லது ஊரைக் காப்பாற்றும் வீரச்செயல்களின் போது வீழ்ந்து பட்ட வீரர்களுக்கு நடுகல் எடுப்பித்தனர் அந்த பகுதியையே புனிதமாக கருதினர். சாம்ராஜ்நகர், மைசூர், தாளவாடியிலுள்ள பல கிராமத்திலும் தொன்மைகால ஈமச்சின்னங்கள்,நடுகற்கள் சதிகற்கள் செக்கு கல் ஆகியவை ஒரேயிடத்தில் அருகருகே கிடைப்பதை காண்கிறோம்.

மேலும் தொல்காப்பியத்தில் காண்கிறபடி காட்சி கால்கோள் நீர்படை நடுதல் என்ற படிநிலைகளில் நடுகல் செய்வதற்குரிய தேடி சென்று, மலையினின்று கல்லை வெட்டியெடுத்து நீராட்டி, தூய்மைபடுத்தி நட்டு சிறப்புகளை படைத்து வாழ்த்தி அதை தெய்வீக தன்மை கொண்ட கல்லாக புனிதமூட்டினர் என அறிகிறோம் எனவே புதிதாக ஒரு கல்லை தெரிவு செய்து இத்துணை சடங்குகளை நிகழ்த்துவதற்கு மாற்றாக ஏற்கெனவே அமைக்கப்பட்ட நடுகல்லின் மறுபுறத்தில் பிறிதொரு வீரனுக்கும் நடுகல் வடித்து வழிபட்டதால் இத்தகு அரிய நடுகற்கள் நமக்கு கிடைக்கின்றன எனக் கொள்ளலாம்!






பயணங்கள் தொடரும் 

15 December 2021

வேழக்காடுகளில்சோழச்சுவடுகள் - தலக்காடு மணலில் புதையுண்ட சோழர்கால கோயில்கள், கர்நாடக மாநிலம் / Karnataka

கட்டுரை ஆசிரியர்
திரு ஜான் பீட்டர், வரலாற்று ஆய்வாளர், தொல்லியல்துறை முன்னாள் அதிகாரி, மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர், தாளவாடி 

 ( சென்ற பதிவின் தொடர்ச்சி...)
மேலை கங்கர் சாசனங்களும், கன்னட சாஹித்யங்களும் தலைக்காட்டை தலவனபுரா,கஜ ஆரண்ய க்ஷேத்ரா,தலைக்காடு, கரிவனா(வேழக்காடுகள்) என பல பெயர்களில் அழைத்தாலும் சோழர் கால கல்வெட்டுகள் முடிகொண்ட சோழ மண்டலத்து "தழைக்காடான இராஜராஜபுரம்" என குறிப்பிட்டு இன்ன வள நாட்டை சேர்ந்தது என சுட்டவில்லை! ஆயினும் சாம்ராஜ்நகர் மாவட்டம் பெட்ட ஹள்ளி( தமிழ் கல்வெட்டுகளில் வேடன் பள்ளி) என்னும் ஊரிலுள்ள இரண்டாம் வீரபல்லாளன் காலத்திய தமிழ் கல்வெட்டொன்று தலக்காடு "மும்முடி கொண்ட சோழ மண்டலத்து இராஜேந்திர சோழ வளநாட்டு வடகரை நாட்டு தழைக்காடான இராஜராஜபுரம் என்ற வளநாட்டு பிரிவைச் சொல்கிறது.

தலக்காடு கோயில்கள்-:
ஹள கன்னட மொழி கல்வெட்டுகள் இவ்வூரை "ஹொய்சாள தேசத்தின் தக்ஷிண வாரணாசி" என குறிப்பிடுப்படுவதால் அக்காலத்தில் தலக்காடு ஏராளமான கோயில்கள் நிறைந்த ஊராக திகழ்ந்திருக்கும் என்பதையறியலாம்.
தற்போது வைத்தீஸ்வரர் கோயில் மரலீஸ்வரர் கோயில், பாதாளீஸ்வரர் கோயில், சௌடேஸ்வரி ஆலயம்,கீர்த்தி நாரயணண் கோயில் வீர பத்ரர் கோயில், கோகணேஸ்வரர் கோயில், கௌரிசங்கரர் கோயில் போன்றவை பக்தர்கள் வழிபாட்டில் உள்ளன. இவற்றுள் பாதாளீஸ்வரர் மற்றும் மரலீஸ்வரர் கோயில்கள் 10-11ம் நூற்றாண்டை சேர்ந்த கங்க-சோழ கலைப்பாணியென கோயில் கட்டிட முறை, சிற்பங்களின் வேலைப்பாடு ஆகியவற்றை கொண்டு உறுதி செய்யலாம் மேலும் இக்கோயில்களில் சோழர் கால கல்வெட்டுகளும் ஆவணப்படுத்ப்பட்டுள்ளது. மேலும் வைத்தீஸ்வரர் கோயில் சோழர் காலத்தில் (முதலாம் குலோத்துங்கன்) கட்டப்பட்டு விஜயநகர, மைசூர் உடையார் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது கீர்த்தி நாராயணன் கோயில்() வரம் தரும் பெருமாள் 1117A.D.ஆண்டு சோழர் மீதான வெற்றியின் நினைவாக ஹொய்சாள மன்னன் விஷ்ணுவர்த்தனால் கட்டப்பட்டது ஏனையவை பிற்காலத்தியவை.

மண்ணுக்குள் புதையுண்ட சோழர் கால கோயில்கள்-:
மேற்காண் கோயில்களை தவிர தலக்காடு, தி.நரசிபுராவைச் சுற்றியுள்ள ஊர்களில் கிடைக்கும் கல்வெட்டு ஆவணங்கள் (எபி.கர்.மடலங்கள் 3,4,5) துணை கொண்டு ஆய்வு செய்தோமெனில் சோழர் காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படும் பல கோயில்கள்  தற்போது மணல் மேடுகளுக்குள் புதையுண்டிருக்கலாம் என்ற ஐயப்பாடு  எழுகின்றது. அவை:-

1. பெரிய நகரீஸ்வரமுடைய நாயனார் கோயில் ( சோழர் கால வணிகர்கள் எடுப்பித்தது)
2. வேலைக்காரேஸ்வரர் கோயில்
( அரச மெய்காப்பாளர் படை பிரிவினரால் கட்டப்பட்டிருக்கலாம்)
3.இராஜராஜேஸ்வரமுடையார் கோயில்.
இராஜராஜனின் காலத்தியது. இக்கோயிலில் திருவோணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது என்பதை கல்வெட்டு சான்றுகள் மூலம் அறிகிறோம்.)
4. அழகேஸ்வரமுடையார் கோயில்.
5. திரு பன்றீஸ்வரமுடையார் கோயில்.
6.சண்டிகேஸ்வரர் மற்றும் சண்டிகாம்பிகை கோயில்கள்.
7. தாண்டேஸ்வரர் கோயில்.
8.இராஜேந்திர சோழ விண்ணகரம்
9.இராஜேந்திர சோழ சதுர்வேதி மங்கலத்திலுள்ள வைகுந்த பெருமாள் கோவில் மற்றும் தில்லை நாதன் திருமண்டபம்.

சமணம் தழைத்தோங்கிய தலக்காட்டில் சைவ வைணவ கோயில்கள் மட்டுமல்லாமல் சோழர்கள் சமண பள்ளிகளையும் கட்டுவித்தனர்.
1.மஹா மேரு விடங்கன் பள்ளி
2.மால் வரி விடங்கன் பள்ளி
3. கஞ்சமங்கலம் உடையான் பள்ளி.

போன்றவையும் ஹொய்சாளர் காலத்தியதாக கருதப்படும் சைலஸ்வரர் கோயில், மல்லிகார்ஜூனசுவாமி, விக்னேஸ்வரா போன்ற கோவில்களும் மண்ணுக்குள் புதையுண்டிருக்கலாம்.

இங்ஙனம் ஏராளமான தொன்மை சின்னங்களும் புராதன கோயில்களும் மணலால் மூடப்பட்ட தலக்காட்டில் Directorate of Archeology and Museum in Karnataka மற்றும் Ancient History and Archaeology Dept.of University of mysore ம் இணைந்து பல்வேறு கட்டங்களாக அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நமது தற்போதைய தமிழக அரசும் தொல்லியல் துறையின் பால் அதீத நாட்டம் கொண்டு அகழாய்வுகள் பணிகளை முடுக்கி விட்டிருக்கும் இந்நிலையில் பழந்தமிழர் வணிகம் கலாச்சாரம் ஆட்சி நிர்வாகம் மேற்கொண்ட தமிழகம் தாண்டிய பகுதிகளான பாலூர்,வேங்கி, தலக்காடு  போன்ற இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை நடத்த போவதாக தெரிவித்துள்ளது.(பி.பி.ஸி.தமிழ் செப்.26. 21) புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் வரலாற்று துறை தமிழ்நாடு தொல்லியல் துறையுடன் இணைந்து செயலாற்றி வரும் பேராசிரியர் கே.இராஜன் இத்தகவலை வெளியிட்டுள்ளார் இது உள்ளமட்டிலும் வரவேற்க தாக்கதொன்றாகும். குறிப்பாக தலக்காடு மணல் மேடுகளுக்குள் பல நூறு ஆண்டுகளாக புதைந்து கிடக்கும் சோழர் தடயங்கள் வெளிச்சத்திற்கு வந்தால் பல அரிய வரலாற்று தரவுகள் கிடைக்க கூடும் என்பது திண்ணம்!







10 October 2021

வேழக்காடுகளில்சோழச்சுவடுகள் - Sri Mahaligeswarar Temple & Sri Chamundeeswari Amman Temple, ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோயில், சாமுண்டீஸ்வரி கோயில், ஹொன்னூர் / Honnur, Chamrajnagar District, Karnataka

கட்டுரை ஆசிரியர்
திரு ஜான் பீட்டர், வரலாற்று ஆய்வாளர், தொல்லியல்துறை முன்னாள் அதிகாரி, மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர், தாளவாடி 

சாம்ராஜ்நகரிலிருந்து தலக்காடு செல்லும் சாலையில் எலந்தூர் தாலுகாவிற்கு முன்பாக 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஹொன்னூர் என்னும் பெயருடைய இச்சிறு கிராமம். இவ்வூர் பழந்தமிழ் கல்வெட்டுகளில் "முடிகொண்டசோழமண்டலத்து கங்கை கொண்ட சோழவளநாட்டு பதிநாட்டு பொன்னூர்" என குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் 12 நூற்றாண்டு ஹொய்சாளர் தமிழ் கல்வெட்டில் இவ்வூரானது "பொன்னூரான துளுவமாதேவி சதுர்வேதிமங்கலம்" என்று பிரமதேயமாக  விளங்கியதையும் காண்கிறோம்.

கோயில்கள் -:
இங்கு தற்போது ஹொய்சாளர் காலத்தை சேர்ந்த மஹாலிங்கேஸ்வரர் கோயில், சாமுண்டீஸ்வரி திருக்கோயில், கங்க தேசத்தின் நாட்டார் தெய்வமான இராக்காசம்மா நவர சன்னதி போன்றவை அமைந்துள்ளது.

கல்வெட்டுகள்-; கங்கர் கால ஆநிரைமீட்டல் நடுகல் கல்வெட்டு, சோழர் கால வணிக கல்வெட்டு, ஹொய்சாளர் கால தமிழ் மற்றும் ஹள கன்னடமொழி கல்வெட்டுகளுமாக மொத்தம் 7கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு எபி.கர்.மடலம் நான்கு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வெட்டு செய்திகள்-:
பொ.யு.10ம் நூற்றாண்டை சார்ந்த கங்க அரசன் பெர்மானடியின் 3 ம் ஆட்சியாண்டு ஹள கன்னட மொழி நடுகல் கல்வெட்டொன்று இவ்வூரை சேர்ந்த பொன்னவய்யா என்ற வீரன் கள்வர்கள் ஆநிரைகளை கவர்ந்து சென்ற போது அவர்களுடன் ஏற்பட்ட பூசலின்றி காரணமாய் உயிர் துறந்து விட்டதால் அவனின் சகோதரனால் எடுப்பிக்கப்பட்டது இது ஆநிரைமீட்டல் நடுகல்லாகும்.

சோழர் கால வணிகர்கள் கல்வெட்டு-:
பண்டைய காலத்தில் இங்கு சோழர் கால வணிகர் குழுக்களான நானாதேசிகர் பதிணென்பூமி விஷயத்தார், திசையாயிரத்து ஐந்நூற்றுவர் போன்றோர் பரவலாக வசித்து வந்ததும் பொன்னூர் மட்டுமின்றி பதிநாட்டு பல்வேறு ஊர்களிலுள்ள கோயில்களுக்கு நிவந்தம்,தானங்களை வழங்கி நாட்டு நற்பணியில் சிறந்து விளங்கியதையும் இங்கு கிடைக்கப் பெறும் தமிழ் கல்வெட்டுகள் மூலமாக அறியற்பாலாகிறது.

11 ம் நூற்றாண்டு சோழர்கால தமிழ் கல்வெட்டொன்று கங்கை கொண்ட சோழவளநாடு பொன்னூர் பதிணென்பூமிநாட்டார் திசையாயிரத்து ஐந்நூற்றுவர் குழுவை சேர்ந்த நானாதேசியன் அம்பலவாணன் என்பவன் தழைக்காடு எ இராஜராஜபுரத்திலிருக்கும் பெரியநகரீஸ்வரமுடைய நாயனார்க்கு தேவதானமாக நஞ்சை நிலத்தை கொடையாக வழங்கியதும் இத் தன்மத்திற்கு சாட்சியாக வீரகங்கரசர், இராஜேந்திர பெருமாடி, பன்ம காமுண்டா, இருமடி உத்தம சோழா போன்றோர் கையொப்பமிட்டதையும் கூறுகிறது. இதே காலத்தை சேர்ந்த சிதைந்த நிலையிலுள்ள தமிழ் கல்வெட்டொன்று பதிநாட்டு வேலாபுரம் திசையாயிரத்து ஐந்நூற்றுவர் பற்றி குறிப்பிடப்படுகிறு ஆனால் வேலாபுரம் என்றழைக்கப்பட்ட பகுதி தற்போது யாதென அறியகிடக்கவில்லை!.

ஹொய்சாளர் கால தமிழ் கல்வெட்டுகள்-:
12 ம் நூற்றாண்டு ஹொய்சாளர் கால தமிழ் கல்வெட்டு பொன்னூரைச் சேர்ந்த "பரதேசி மலையரசன் சிறுமயன் கோட்டுபுக்கன்" என்பவன் இங்கு தண்ணினேரி என்ற பெயரில் ஏரியை வெட்டுவித்து அம்பல ( மண்டபம்) த்தையும் கட்டுவித்தான் என குறிப்பிடுகிறது தற்போது இந்த ஏரி கெங்கெரே என அழைக்கப்படுகிறது. ஏரியின் கரைப்பகுதியில் தான் கங்கர் மற்றும் சோழர் கால கல்வெட்டுகள் காணக்கிடைத்ததாக ஆவணத்தில் குறிப்பிடப்படுகிறது ஆனால் கட்டுரையாளரின் கள ஆய்வின் போது அந்த ஏரியின் நிலப்பரப்பு பகுதிகள் சிலவற்றை தனியார் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் மேற்கொண்டு வருவதும் தெரியவந்தது மேலும் எஞ்சிய பகுதிகளில் புதர் மண்டி முட்செடிகள் நிறைந்து காணப்பட்டதால் எவ்வளவு முயன்றும் அந்த சோழர் வணிக குழுவினர் கல்வெட்டுகளை கண்டறியவியவில்லை! ஆனால் அங்கு நடுகற்கள் உதிரி சிற்பங்கள் சிலவற்றை காணமுடிந்தது.

இங்குள்ள மஹாலிங்கேஸ்வரர் கோயில்
ஹொய்சாளார் காலத்தியது தற்போது முற்றிலும் புனரமைக்கப்பட்டு வண்ணம் பூசிய நிலையில் காட்சிதருகிறது மேலும் இக் கோயிலின் வட திசையில் பலகை கல்லில் தமிழ் மொழி கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இது ஹொய்சாள பேரரசன் இரண்டாம் வீரபல்லாளனின் பொ.யு.1191 ஆட்சியாண்டு கல்வெட்டாகும் இதில் இவ்வூரானது பொன்னூரான துளுவமாதேவி சதுர்வேதி மங்கலம் என குறிப்பிடப்பட்டுள்ளது தக்காணச்சக்கரவர்த்தி என்று போற்றப்படும் இரண்டாம் வீரபல்லாளன் துளு நாட்டை வெற்றி கொண்டு அந்நாட்டு அரசியை மணந்திருந்தான் தமக்கு முன்னதாக கங்க மண்டலத்தை ஆட்சி செய்த சோழர்களை அடியொற்றி ஹொய்சாள அரசர்களும் தமது அரசியின் பெயரில் சதுர்வேதி மங்கலம் அமைத்தை இங்கு காண்கிறோம்!


மேலும் இக்கல்வெட்டில் அபாதிருண காமுண்டன் மகன் மார காமுண்டன் என்பவன் கங்கை கொண்ட சோழவளநாட்டு சதுர்வேதி மங்கலமான அகரா என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் குலசேகரநாயனமுடையார்க்கும் மற்றும் தேவியரான துர்க்கை அம்மனுக்கும் ஸ்ரீதானமாக நிலத்தை தானமாக வழங்கியதையும் குறிக்கிறது.